பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இயல் - IX
சேதுநாட்டில் ஜமீன்தார் ஆட்சிமுறை

ஜமீன்தாரி முறை என்பது தமிழகத்திற்கு மட்டுமல்ல. இந்திய நாட்டிற்கே புதுமையானது. இங்கிலாந்துப் பேரரசி எலிசபெத் ராணியாரிடம் பரிந்துரைக் கடிதம் பெற்று வந்த சர் தாமஸ் மன்ரோ என்பவர் இந்தியாவில் தங்களது ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியாரது வணிகத்தை நடத்துவதற்காக முகலாய மன்னர் ஜஹாங்கீரிடம் கி.பி. 16oo-இல் அனுமதி பெற்றார். குஜராத்திலும், வங்காளத்திலும் சேமிப்புக் கிடங்குகளை ஏற்படுத்தி வியாபாரம் செய்து வந்தனர். காலப்போக்கில் வங்காளத்தின் அதிபராய் இருந்த சிராஜ் உத் தெளலாவிற்கு எதிரிகளான மீர்காசிமுக்கு உதவிகள் செய்து வங்காளத்தில் காசிம் பஜார் போன்ற இடங்களை அன்பளிப்பாகப் பெற்றனர். அந்தப் பகுதியில் இருந்த குடிகளிடமிருந்து நேரிடையாக அரசிறைகளை வசூலிப்பதற்குப் பதிலாக இந்த ஜமீன்தாரி முறையினை முதன் முதலில் கம்பெனியின் கவர்னர் ஜெனரலாய் இருந்த கார்ன்வாலீஸ் அங்கு அறிமுகப்படுத்தினார்.

இந்தக் காலகட்டத்தில் ஆற்காட்டு நவாப் முகமது அலியின் கூலிப்படையாக அமைந்து, பாண்டிய நாட்டுப் பாளையக்காரர்களிடமிருந்தும், தஞ்சாவூர் மன்னரிடமிருந்தும் கப்பத் தொகையை வசூலிப்பதற்காகச் சென்னையில் உள்ள கிழக்கிந்தியக் கம்பெனியாரது படையணிகள் பயன்பட்டன என்பதை முன்னர் பார்த்தோம். இந்தப் படை அணிகளின் போர்ச்செலவுகளுக்கு வழங்கப்பட வேண்டிய தொகையினைச் சில பகுதிகளில் கிழக்கிந்தியக் கம்பெனியார் அவர்களே வசூலித்துக் கொள்ளும் உரிமையை ஆற்காடு நவாப் வழங்கி இருந்தார். குறிப்பாக நெல்லூர், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளிலும், பின்னர், திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலிச் சீமைகளிலும் வரிவசூல் செய்துகொள்ளும் உரிமையை ஆங்கிலேயர் பெற்றனர்.

கி.பி. 1790 முதல் கி.பி. 1801 வரை சிவகங்கைச் சீமையின் பிரதானிகளான மருது சேர்வைக்காரர்கள் ஆங்கிலேயருடன் முரண்பட்டு சிவகங்கைச் சீமை மக்களைத் திரட்டி கி.பி. 1800 - 1801ல் ஆங்கிலேயருக்கு எதிரான கிளர்ச்சியை முடுக்கி விட்டனர். இந்த