பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ். எம். கமால்

95

சிறையிலடைக்கப்பட்டதை முன்னரே குறிப்பிட்டுள்ளோம். கும்பெனியார் அவரது தமக்கையார் ராணி மங்களேஸ்வரி நாச்சியாரது உரிமையினை ஏற்றுக்கொண்டனரேயொழிய அவருக்கு இராமநாதபுரம் சீமையை ஆளும் உரிமையை வழங்கவில்லை. மாறாகக் கும்பெனியார் இராமநாதபுரம் சீமை நிர்வாகத்தைத் தமது கலெக்டர்கள் லாண்டன், பவுனி, ஜாக்சன், லூசிங்டன் ஆகியோர் மூலமாக கி.பி. 1803 வரை நடத்தி வந்தனர்.

ஆனால் மன்னரது இராஜ விசுவாசியான சித்திரங்குடி மயிலப்பன் சேர்வைக்காரரது கிளர்ச்சிகளின் காரணமாக கும்பெனியாருக்கு மிகுந்த இடையூறுகளும், இழப்புகளும் கி.பி. 1802 வரை ஏற்பட்டு வந்தது. மேலும் மேலும் அத்தகைய இழப்புகள் தொடர்வதைத் தவிர்க்க இராமநாதபுரம் சீமையில் ஒரு பாரம்பரிய ஆட்சிமுறையை அமுல் நடத்த வேண்டுமென அப்பொழுதைய கலெக்டர் லூசிங்டன் கும்பெனித் தலைமையை வற்புறுத்தி வந்தார்.[1]

கும்பெனித் தலைமையும் கலெக்டர் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு அன்றைய கும்பெனியாரது நடைமுறைகளின்படி இராமநாதபுரம் சீமையை ஜமீன்தாரியாக மாற்றி உத்திரவிட்டதுடன் முதல் ஜமீன்தாரினியாக மங்களேஸ்வரி நாச்சியாரை நியமனம் செய்தது.

I. ராணி மங்களேஸ்வரி நாச்சியார் கி.பி.(1803-1812)

கும்பெனியாருக்கு ஆண்டுதோறும் 3,20,000 ரூபாய் பேஷ்குஷ் தொகை செலுத்துவதாக ஒப்புக்கொண்டு 21.02.1803-ல் இராமநாதபுரம் ஜமீன்தாரினியாகப் பொறுப்பேற்றார் இராணி மங்களேஸ்வரி நாச்சியார்.[2] தொடர்ந்து இவரும் தமது முன்னோர்களைப்போல ஆன்மீகப் பணிகளில் மிகவும் அக்கறை கொண்டிருந்தார். திருஉத்திரகோசமங்கை, பள்ளிமடம், இராமநாதபுரம், நயினார் கோவில் ஆகிய ஆலயங்களுக்கு ஏராளமான நன்கொடை வழங்கினார். மதுரையில் உள்ள மதுரை ஆதீனத்தின் திருஞானசம்பந்த மடத்தின் சீரமைப்பிற்கும் மிகவும் உதவினார். தனது வளர்ப்பு மகள் சேசம்மாளின் பெயரில் திருப்புல்லாணியை அடுத்துள்ள அகத்தியர் குட்டத்தில் சீனிவாசப் பெருமாளுக்குச் சிறிய திருக்கோயில் ஒன்றை எடுத்துத் திருப்பணி செய்ததுடன் அக்கோயிலின் பராமரிப்பிற்காக நெடிய மாணிக்கம் என்ற ஊரையும் சர்வமான்யமாக வழங்கினார்.[3]


  1. Raja Ram Rao. T-Manual of Ramnad Samasthanam. 1891. Page-269
  2. Raja Ram Rao.T- Manual of Ramnad Samasthanam (1891) Page-269.
  3. கமால் S.M. Dr. சேதுபதி மன்னர் செப்பேடுகள் 1994). செப்பேடு எண்: