பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 சேரநாட்டில் ஒருநாள் துணங்கைக் கூத்து நிகழ்ந்தது. ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் மகளிர்க்குத் தலைக்கை: கொடுத்துத் துணங்கைக் கூத்தாடி மகிழ்ந்து வீடு: திரும்பினான். அவன் வீட்டில் அவன் உரிமை மனைவி அரசி, ஊடல் கொண்டு நின்றாள். வேற்றுமைகளிரோடு கைபிணைந்து ஆடிய அவன் செயல் அவள் நெஞ்சில் சினத் தையும் வெறுப்பையும் விளைத்தது. அசைந்த கோதையும் பரந்த தேமலும் குளிர்ந்த கண்ணும் பெரிய இயல்பும் கொண்ட அவள் சினக்குறிப்பை வெளியிட்டாள். மலரிதழ் ஒத்த அவளின் வண்ணச் சீரடிகள் அவள் நடந்தபோது அவள் நெஞ்சிற் கொண்ட சினத்தைப் புலப்படுத்தின. அவள் காலில் அணிந்திருந்த கிண்கிணிகள் தேம்பின. அலையால் தாக்கப்பட்ட தளிர் போலும் அவள் அசை வுற்றாள். சினத்தால் வாயிதழ் துடித்தாள். தன்பால் இவ்வளவு மாற்றம் ஏற்பட அரசனை நன்றாக ஒறுக்க வேண்டும் என எண்ணினாள். ஒரு சிறு செங்குவளை மலரை எடுத்து அவன்மீது எறிய ஓங்கினாள். அவனோ அரசியின் சினத்திற்கு எதிர்சினம் காட்டாமலும், அவள் ஊடலுக்கு எதிர் ஊடல் செய்யாமலும் அமைதியாக நின்று அவள்மாட்டுக் கொண்ட அன்பெல்லாம் தன் கண்ணிலும் முகத்திலும் தேக்கிக் காட்டி முறுவல் ஊட்டி அவள் கைம்மலரில் கொண்ட சிறு செங்குவளை மலரை அன்புக் கொடையாகத் தனக்கு அளித்து விடுமாறு பணி மொழி கூறி மணிக்கை ஏந்தி யாரையும் எப்பொழுதும் ஏற்றறியாத அவன் இரந்து நின்றான். அதுபோது அரசி சினம் தணியாதவளாய் நீ எமக்கு யாரையோ?" என்று கூறி அவ்விடம்விட்டு அகன்றாள். இந்தச் செய்திகளை ஒரு நாடகக்காட்சி போலக் கேட்போர் படிப்போர் அகக் கண்ணில்பட்டு இன்பம் பெருக்கெடுக்கக் காக்கைபாடினி யார் நச்செள்ளையார் என்னும் புலமை மெல்லியலார் பாட்டோவியம் தீட்டிக் காட்டியுள்ளார்.