பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி 2 எட்டுத்தொகை 1. நற்றிணை ஒன்பது அடி முதல் பன்னிரண்டு அடிவரையுள்ள நானுாறு அகப்பாடல்களைக் கொண்டது; சிறப்புப் பற்றி நல் என்ற அடைபெற்றது. இதைத் தொகுப்பித்தவன் பாண்டிய மன்னன் பன்னாடுதந்த பாண்டியன் மாறன் வழுதி என்பவன். தொகுத்த புலவர் யார் என்பது தெரியவில்லை. இயற்கைப் பொருளைப் புலவர்கள் நுட்ப மாகக் கண்டறிந்து பாடிய பாடல்களை நற்றிணையில் காணலாம். இயற்கைப் பொருளை உவமைகளாகக் கூறும் திறனும், தக்க இடங்களில் நீதிகளை அமைத்துப் பாடும் சிறப்பும் முதற்பொருளையும் உரிப் பொருளையும் கூறும் வாயிலாக இயற்கைக் காட்சிகளை வருணிக்கும் திறமும் நற்றிணைப் புலவர்களிடையே நாம் காணும் சிறப்பாகும். நற்றிணையில் சேரநாட்டு இலக்கியமாகத் திகழ்பவை இருபத்திரண்டு பாடல்களாகும். இதன்கண் இடம் பெற்றுள்ள வரலாற்றுக் குறிப்புகள், பழக்க வழக்கங்கள், இயற்கை வருணனை, உவமைகள், அகப்பொருள் நுட்பம் முதலியவற்றை இனிக் காண்போம்: வரலாற்றுக் குறிப்புகள் நற்றிணை சங்க இலக்கியத்தைச் சார்ந்த அகப் பொருள் நூலாயினும் அதில் வரலாற்றுக் குறிப்புகள் 1, நற்றின்ை 8, 9, 18,35,48, 105, 113, 118, 167, 185, 195, 202, 224, 237, 256, 318, 337, 346, 381, 384, 391, 395.