பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/611

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

615 நல்கிய அந்தாதி நூல்கள் காலப்போக்கில் அருஞ்சொற் மொடர்களையும், கடினமான சொற்புணர்ச்சிகளையும் பெற்று, இரட்டுற மொழிதல், மூன்றுற மொழிதல், நான்குறமொழிதல், ஐந்துற மொழிதல், ஆறுற மொழிதல் என்ற அளவு வரை விரிந்து பரந்து, திரிபு, மடக்கு, சிலேடை முதலிய மிறைக்கவிகளாய்ப் புலவர் பெருமக்களால் இயற்றப்பட்ட எல்லையில் பொதுமக்கள் எளிதிற் படித்துச் சுவையுணர்வதற்கு எட்டா நிலையிற் சென்று விட்டன. பாமரர் பாராட்டும் நிலையைக் கடந்து, பண்டிதர் மட்டும் தம்முள் சுவைக்கும் எல்லையை எட்டி விட்டது. எனவே அந்தாதி நூல்கள் வழக்கு வீழ்ந்தன. வரலாற்று முறைக்கண் அந்தாதி நூல்களை நோக்கும் போது, திருமூலர் அருளிய திருமந்திரத்தின் நான்காந் தந்திரத்தில் பல தலைப்புகளில் நூற்றுக்கணக்கான செய் யுட்கள் அந்தாதியாக அமைந்திருக்கக் காணலாம். அடுத்து, கி. பி. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த காரைக் காலம்மையார் பாடிய அற்புதத் திருவந்தாதியினையும், இரட்டை மணிமாலையினையும் குறிப்பிடலாம். கி. பி. எட்டு ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவரான சேரமான் பெருமாள் நாயனார் இயற்றியவை பொன்வண்ணத் தந்தாதியும் திருவாரூர் மும்மணிக் கோவையுமாகும். நாயன்மார்களில் திருஞான சம்பந்தரின் திருப்பிரமபுரத் தேவாரம் ஏகபாதமாக அமைந்திருக்கக் காணலாம். மாணிக்கவாசகரின் திருச்சதகமும், நீத்தல் விண்ணப்பமும் அந்தாதிகளே. ஆழ்வார்களுள் பேயாழ்வார், பூதத் தாழ்வார், பொய்கையாழ்வார், நம்மாழ்வார் முதலா னோர் அந்தாதித் தொடையில் சில பாடல்களைப் பாடி யுள்ளனர். சைவத் திருமுறைகள் பன்னிரண்டனுள், பதினோராந் திருமுறையில் நக்கீர தேவ நாயனார், கபில தேவ நாயனார், பரணதேவ நாயனார் ஆகிய மூவர் இயற்றிய கைலைபாதி காளத்திபாதி அந்தாதி, கபிலதேவ நாயனார் சிவபெருமான் திருவந்தாதி, பரணதேவ