பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/701

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 707 சிவபெருமான், நந்தி தேவரும் மாகாளரும் காவல் புரிகின்ற வாயில்களைக் கடந்து புறம் போந்தான். அக்காலையில் வசுக்கள் எண்வகை ஆசிகள் கூறினர். புகழ்சான்ற முனிவர்கள் எழுவரும் வாழ்த்துரை வழங்கினர். பன்னிரு ஆதித்தரும் பல்லாண்டு பாடினர். அகத்தியர் யாழ் இசைத்தார். அங்கியங் கடவுள் அகில் முதலான நறுமணப் புகைகளை ஏந்தினார். இயமன் நன்மொழிகளால் வாழ்த்தி நின்றான். நிருதி முதலானோர் நிழற் கலன்கள் எடுத்தனர். வருணன் நிறைகுடம் ஏந்தி நின்றான். வாயு தேவன் தெருக்களை நீர்மைப்படுத்தினான். மேகங்கள் நீர் தெளித்தன. திங்கள் குடை நிழற்றியது. ஈசானன் அடப்பை ஏந்தினன். அச்சுவினி தேவர்கள் மந்திரமொழி களால் வாழ்த்துரை நவின்றனர். உருத்திரர்கள் பாராட் டுரை பகர்ந்து நின்றனர். குபேரன் அளவிடற்கரிய பெரும் பொருளினை யாவர்க்கும் பரிசிலாக வாரி வீதிகளில் விசிச் சென்றான். கங்கை யமுனை முதலான துய்மை நிறைந்த ஆற்றுத் தெய்வங்கள் கவரி வீசின. எண்வகைப் பாம்பு களும் சுடர் எடுத்தன. எண்டிசை யானைகளும் இறைவன் திருவடிகளில் ஏற்றமுறப் பணிந்து நின்றன. முகிற் கூட்டங்கள் விதானமாக அமைந்தன. மின்னல்கள் கொடி களாக விளக்கந் தந்தன. இடிகள் முரசங்களாக ஆர்த்தன. தும்புரு நாரதர் இசை முழக்கினர். அரம்பை ஊர்வசி மேனகை திலோத்தமை முதலான தெய்வ மகளிர் நடனம் ஆடினர். பூதகணங்கள் காவற்றொழில் புரிந்தன. அந் நிலையில் தேவர்கள் பலரும் வணங்கி நிற்க இறைவன் தனக்குரிய வெள் விடைமீது இவர்ந்து, திருக்கோயிலின் ஏழு வாயில்களையும் கடந்து வீதி உலாப்போந்தான். தேவ சேனாபதியாம் திருமுருகப்பெருமான் மயிலின் மீது ஏறி முன்னே சென்றார். தேவேந்திரன் அயிராவதம் என்னும் யானையின்மேல் ஏறிப் பின்புறம் வந்தான். பிரமன் அன்னத்தின்மேல் அமர்ந்து வலப்புறம் வந்தான். திருமால் கருடன்மேல் அமர்ந்து இடப்பக்கம் சென்றார்