பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/733

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிறைவுரை முடியுடை மூவேந்தர்களில் சேரர்களே முதலாவது வைத்து எண்ணப் பெறுகிறார்கள். சேர சோழ பாண்டியர் என வழங்குவது மரபு. தொல்காப்பியனாரும் போந்தை, வேம்பே ஆர் என வரூஉம் மாபெருந் தானயர் மலைந்த பூவும்' என்று மூவேந்தர்தம் அடையாளப் பூமாலையைக் குறிப்பிடும் பொழுது முதற்கண் சேரர்க்குரிய பனம்பூ மாலையினைச் சுட்டியுள்ளார். மேலும் சோழ பாண்டியர் ஆகிய இருவரும் ஆண்ட நிலவெல்லையினும் சேரர் ஆண்ட நிலவெல்லை பெரிது என்பர் பேராசிரியர் மு. இராகவை யங்கார். மேலும் வீரத்திலும் கொடையிலும் மேம்பட்ட அரச மரபு சேரர் மரபே என்பதும், சோழ பாண்டியர் மரபு போல் இடையறவுபட்டு நின்றுவிடாமல் இன்றும் திருவனந்தபுரத்தில் சேர அரச பரம்பரை தொடர்கிறது என்றும் உரைப்பர். மேலும் பதிற்றுப்பத்து என்னும் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று முழுக்க முழுக்கச் சேர அரச பரம்பரையின் வரலாற்றை நிரல்படக் கூறுகின்றது. இவ்வாறு சோழ பாண்டியர் பற்றிக் குறிப்பிடும் முழு நூல் யாதொன்றும் இல்லை என்பதும் நினைக்கத் தக்கதாகும். அடுத்து, தமிழில் இன்று வழங்கும் நூல்களுள் தொல் காப்பியமே பழமையுடையது என்பதும், அந்நூல் சேர நாட்டில் திருவிதாங்கோடு எனும் பகுதியில் எழுந்தது என்பதும் எண்ணத்தக்கது. இவ் இலக்கண நூலேயன்றித் தமிழின் முதற்பெரும் காப்பியமாம் சிலப்பதிகாரத்தினை இயற்றிய இளங்கோவடிகளார் குணவாயிற் கோட்டத்து அரசு துறந்திருந்த சேர இளவல் ஆவர். மேலும் பதிற்றுப் பத்திற் காணலாகும் காட்சிகள் இன்றைய கேரள நாட்டில் காணத்தக்க காட்சிகளாகும்.