பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

3

யொன்றைக் காட்டி நிற்கும் தீபஸ்தம்பமாக இச் செங்குட்டுவனைக் கூறல் தகும். இவ்வரசனது வரலாறுகளாக முன்னூல்களுட் கூறப்பட்டவற்றை ஒருசேர ஆராய்வதனால், சேரவமிசத்தின் பழைய செய்திகள் மட்டுமன்றி, தமிழ்ச் சரித்திரத்தின் முக்கியமான பகுதியையும் நம்மவர் அறிந்து கொள்ள இடமுண்டாம். ஆனால், செங்குட்டுவன் சரித்திரத்திற்குப் பழைய நூல்கள் சிலவேயன்றிச் சாஸன உதவியொன்றும் இதுவரை நமக்குக் கிடைத்திலது. இதனால், எத்துணை இலக்கியப் பிரமாணங்களைக்கொண்டு விளக்கினும், சாஸன பரிசீலனை ஒன்றேயுடையார்க்கு நம்மாராய்ச்சியில் முழுநம்பிக்கையும் உண்டாதல் அரிதேயாம். ஆயினும், பண்டை நூல்கள் ஒற்றுமையுடன் கூறுஞ்செய்திகளை மதித்துத் தழுவிக்கொள்ளுதல் ஆவசியகமென்பதை நல்லறிஞரெவரும் மறுக்கார். பழைய விலக்கியங்களிற் கண்ட சரித்திரவுண்மைகள் காலாந்தரத்திற் கிடைக்கும் சாஸனவுதவியால் வலி பெற்றுவருதலை நாம் கண்டுவருதலால், சங்கச் செய்யுள்களையே முக்கிய ஆதாரமாகக்கொண்டு நிகழ்த்தப்பெறும் இவ்வாராய்ச்சியும் பயன்றரத்தக்கதென்றே நம்புகின்றோம்.

இனி, செங்குட்டுவனது வரலாறுகளை அறிவதற்குச் சாதனமாகக் கிடைத்துள்ள இலக்கியக்கருவிகளை நோக்குமிடத்து, அவை பெரிதும் மதிப்புக்குரியன என்பதில் ஐயமில்லை. என்னெனின், இவ் வேந்தர் பெருமானுடன் பிறந்தவரான இளங்கோவடிகள் தாமியற்றிய சிலப்பதிகாரத்தில் ஒருகாண்டமுழுதும், தம் தமையனது வாழ்க்கையின் ஒரு பகுதியைத் தாம் நேரிலறிந்தவாறு விளக்கியிருக்கின்றார். இவ்வாறு வெற்றிவேந்தனொருவன் செய்திகள் அவன் சகோதரராலே விரித்துரைக்கப்படுமாயின் நாம் அவற்றை