பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

சேரன்-செங்குட்டுவன்

மேற்குறித்தவர் அல்லாத வேறுசில சேரவரசரும் புறநானூறு முதலிய சங்கச்செய்யுள்களிற் காணப்படுகின்றாராயினும், அவர்கட்கும் செங்குட்டுவனுக்குமுள்ள தொடர்பு விளங்கவில்லை.

இனி, இமயவரம்பன் பெருந்தேவியரிடம் பிறந்த மக்களும், இரும்பொறைமரபினரும் சேரநாட்டில் வேறுவேறு தலைநகரங்களில் ஆட்சிபுரிந்தவர்கள். இம் முறையில், கருவூராகிய வஞ்சிமாநகரம் செங்குட்டுவனுக்குத் தலைமை நகராக விளங்க, மாந்தையென்பது நார்முடிச்சேரலுக்கும், தொண்டி இரும்பொறை மரபினர்க்கும் இராஜதானிகளாகவிருந்தன எனத் தெரிகின்றது. மாந்தையுந் தொண்டியும் சேரதேசத் தின் முக்கிய நகரங்கள் என்பது, “சேரலாதன்.... நன்னகர் மாந்தை முற்றத்து”[1] “குட்டுவன் மாந்தை”[2] எனவும், “குட்டுவன் தொண்டி” எனவும் நூல்கள் கூறுதலால் அறியலாம். இவ்விரண்டு தலைநகரங்களும் கடற்கரையில் அமைந்தவை.[3]

மேற்கூறிப்போந்த சேரமரபினரெல்லாம் அறிவு திருவாற்றல்களால் தங்காலத்தே ஒப்புயர்வற்று விளங்கியவரென்பதும் செந்தமிழ்வளர்ச்சி செய்ததில் இன்னோரே அக்காலத்துச் சிறந்து நின்றவரென்பதும் நன்கு வெளியாதல் காண்க.


  1. அகம். 127.
  2. தொல். பொரு. 107 உரை.
  3. கடல்கெழு மாந்தை” (தொல். பொரு. 150 உரை) “கானலந் தொண்டி” (புறம். 48.) எனக் காண்க. இவற்றுள், தொண்டி என்பது முற்காலத்தே பலதேச மரக்கலங்கள் வந்து தங்கும் பெருந்துறைமுக மாக விளங்கிய தென்பது, முன்னூல்களாலும், தாலமி (Ptolemy) முதலிய யவனாசிரியரது குறிப்புக்களாலும் அறியப்படுகின்றது. இப் போது,அகலப்புழையையடுத்துள்ள தொண்டிப்பாயில் என்னுஞ் சிற்றூரைப் பழைய தொண்டியாகக் கருதுவர்.