பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேரன்-செங்குட்டுவன்

ல்லை. ஆயினும் முன்னூல்களின் குறிப்புக்கொண்டு அடியில் வருமாறு அறிதற்பாலன ; இப்போர்களுள்—

(1) செங்குட்டுவன் தாயான நற்சோணை இறந்த போது, அவள் பொருட்டுச் சமைத்த பத்தினிக்கல்லை[1] ரோட்டித் தூய்மை செய்தற்குச் சென்ற கங்காயாத்திரையில், ஆரியவரசர் பலர் திரண்டு வந்து செங்குட்டுவனை எதிர்த்துப் பெரும்போர் விளைத்தனரென்றும், அவரையெல்லாம் அப்பேராற்றங்கரையில் இச்சேரன் தனியனாகப் பொருது வெற்றி கொண்டனனென்றும் தெரிகின்றன. இதனை,

“கங்கைப் பேர்யாற்றுக் கடும்புன னீத்தம்
எங்கோ மகளை யாட்டிய வந்தாள்
ஆரிய மன்ன ரீரைஞ் ஞூற்றுவர்க்கு
ஒருநீ யாகிய செருவெங் கோலங்

கண்விழித்துக் கண்டது கடுங்கட் கூற்றம்.” (சிலப். 25; 160-64)

என்னும் இளங்கோவடிகள் வாக்கால் அறிக. செங்குட்டுவன் தந்தை நெடுஞ்சேரலாதன், முற்கூறியபடி பெருநற்கிள்ளியுடன் பொருது இறந்தபோது, அவன் மனைவியும் செங்குட்டுவன் தாயுமாகிய நற்சோணை உடனுயிர் நீத்தனள் என்பது, புறநானூற்றின் 63-ம் பாடலாற் புலப்படுகின்றது. இங்ஙனம் சக்கமனஞ்செய்த தாயின் பொருட்டுச் செங்குட்டுவன் பத்தினிக்கல் அமைத்தனன் போலும். இங்ஙனமன்றாயின், தனிமையாக இறக்கும் மகளிர்க்குப் பத்தினிக்கல் எடுத்தல் சிறவாதாகும். இவ்வாறு, தாயின் படிமத்தை நீராட்டச் சென்றபோது, கங்கைக்கரையில் செங்குட்டுவன் நிகழ்த்திய இவ்வரிய செயல் அவனது கன்னிப்போர்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது.


  1. சக்கமனஞ்செய்த பத்தினியினுருவம் வரைந்த சிலை; இதனை, மாஸ்திகல் என்பர், கன்னட நாட்டார்.