பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

சேரன் - செங்குட்டுவன்

தாசர் பலர்க்குப் போச்சம்விளைத்த பெருவீரனாக விளங்கிய வன் செங்குட்டுவன் என்பது பெறப்படும்.

(4) இனிச் செங்குட்டுவனது வெற்றிப்புகழ்க் கேதுவாகிய மற்றொரு போர், பழையன் என்பானுடன் நிகழ்ந்ததாகும். பழையன் என்பவன் பாண்டியன் படைத்தலைவனாகிய பெருவீரன். இவன் மோகூர் என்னும் ஊருக்குரியவன் ; “பழையன் மோக ரவையகம்” என்பது மதுரைக் காஞ்சி. இப்பழையனை ‘மோகூர்’ எனவும் வழங்குவர் ; “மொய்வளஞ் செருக்கி மொசிந்துவரு மோகூர்”[1] “மோகூர் பணியாமையின்”[2] எனக் காண்க. மோரியவரசர் திக்குவிசயஞ்செய்துகொண்டு தென்றிசைநோக்கி வந்தபோது, இப்பழையன் அவர்க்குப் பணியாமையால், அவர்க்கும் இவனுக்கும் பொதியமலைப் பக்கத்தே போர் நிகழ்ந்ததென்று தெரிகிறது. செங்குட்டுவன் இப்பழையனுடன் பகைமை பூண்டு போர்புரிந்தது, நெடுந்தூரத்திருந்த தன் நட்பரசனாகிய அறுகை என்பவனுக்கு இப்பழையன் பகைவனாயிருந்தமையால், அந் நண்பனுக்கு உதவி செய்வதற்காகவே என்பது,

“நுண்கொடி யுழிஞை வெல்போ ரறுகை
சேண னாயினுங் கேளென மொழிந்து
புலம்பெயர்ந் தொளித்த களையாப் பூசற்
கரண்கடா வுறீஇ யணங்கு நிகழ்ந்தன்ன

மோகூர் மன்னன் முரசங் கொண்டு.”

என்னும் பரணர்வாக்கால் அறியப்படுகிறது. ஈண்டு அறுகை யெனப்பட்டவன் மோரியவமிசத்துதித்த அரசன் போலும். செங்குட்டுவன் நிகழ்த்திய இப்பெரும்போரில், பழையனது


  1. பதிற்றுப்பத்து. 44
  2. அகம். 251.