38
சேரன்-செங்குட்டுவன்
மறு நாட்காலையில், கோவலன் கௌந்தியடிகளை வணங்கித் தன் துன்பங்களைக்கூறி வருத்தமடைய, அவளால் தேற்றப்பட்டு, கண்ணகியை அவ்வடிகள் பார்வையில் வைத்துப் பின், வாணிகஞ்செய்தற்குரிய இடமறிந்துவரும் பொருட்டு மதுரையினுள்ளே பிரவேசித்து அந் நகரவளங்களைக்கண்டு மகிழ்ந்து திரும்பிக் கௌந்தியிடம் வந்து சேர்ந்து, தன்பழைய நட்பாளனும் தலைச்செங்கானம் என்னும் ஊரிலுள்ளவனுமாகிய மாடலனென்னும் அந்தணனை அவ்விடத்துக்கண்டு அளவளாவிக்கொண்டிருந்தான். அப்போது கௌந்தியடிகள், தம்மிடம் வந்த இடைச்சியர் தலைவியாகிய மாதரி என்பவளது உத்தம குணங்களை நோக்கி, அவள் பாற் கண்ணகியை அடைக்கலமாக ஒப்பிக்க, அவள் மகிழ்ச்சியுடனேற்றுக் கண்ணகியைக் கோவலனுடன் அழைத்துக்கொண்டு ஆயர்பாடியிலுள்ள தன் மனையொன்றில் அவர்களையமர்த்தி, சமைத்துண்ணுதற்கு வேண்டிய பண்டங்களுமளித்துத் தன் மகள் ஐயையைக் கண்ணகிக்குத் துணையாகவைத்துப் பெரிதும் உபசரித்தனள். கண்ணகியும் தான் பெற்றவற்றைப் பக்குவமாகச் சமைத்துத் தன் கணவனுக்கு முறைப்படி பரிமாறக், கோவலன் இனிதாக உண்டு, பின் தன் மனைவியை அருகிலழைத்துத் தான் அவட்குச் செய்த தவறுகளையும் தன் கூடா வொழுக்கங்களையுங் கூறி முன் புரிந்தவற்றுக்கு இரங்கி அவளை யருமைபாராட்டி விட்டு, ‘இனி உன் சிலம்புகளில் ஒன்றைக்கொண்டு நகரத்துள்ளே சென்று விற்று விரைவில் வருவன்; அதுவரையில் நீ ஆற்றியிரு;’ என்று சொல்லி, அவளது சிலம்புகளிலொன்றை வாங்கிக்கொண்டு சென்று, எதிர்ப்பட்ட துன்னிமித்தங்களையும் அறியாதவனாய் மதுரையின் ஆவணவீதியினுள்ளே புகுந்தனன்.