பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

சேரன்-செங்குட்டுவன்

‘இவர்கள் அரசன் கட்டளைப்படி சிலம்புகாண வந்தவர்கள்’ என்று கூறவும், கோவலன் முகக்குறி முதலியவற்றைக்கண்டு ‘இவன் கள்வனல்லன்’ என்று கூறிய காவலாளர்க்கு ‘இவன் கள்வனே’ என்பதை வற்புறுத்திப் பக்கத்தில் நின்றான். அப்போது, அவர்களிற் கொலையஞ்சாதா னொருவன் விரைந்து சென்று தன் கைவாளாற் கோவலனை வெட்டி வீழ்த்தினன்.

இப்பால், கண்ணகியிருந்த இடைச்சேரியிலே பலவித உற்பாதங்கள் உண்டாயின. அவற்றைக்கண்ட மாதரி முதலியோரால் உற்பாதசாந்தியாகத் திருமாலைக்குறித்துக் குரவைக்கூத்தொன்று நிகழ்த்தப்பட்டது. அதன் முடிவில் மாதரி நீராடுதற்பொருட்டு வையையாற்றுக்குச் சென்றாள். அப்பொழுது, சிலம்பு திருடியவனென்று கோவலனைக் காவலாளர் கொன்ற செய்தியை மதுரையுள்ளிருந்து வந்த ஒருத்தி சொல்லக் கேட்ட கண்ணகி, பதைபதைத்து மூர்ச்சித்துப் பலவாறு புலம்பித்தானும் அவனுடன் இறக்கத் துணிந்து, இடைச்சியர் மத்தியில் நின்று, சூரியனை நோக்கி ‘செங்கதிர்ச் செல்வனே! நீ யறிய என் கணவன் கள்வனோ?’ என்றாள். அவன், ‘நின் கணவன் கள்வனல்லன்; அவனை அவ்வாறு சொன்ன இவ்வூரை விரைவில் தீயுண்ணும்’ என்று அசரீரியாகக் கூறினன். அதனைக்கேட்ட கண்ணகி மிகுந்த சீற்றத்தோடும் தன்னிடமுள்ள மற்றொருசிலம்புடனே புறப்பட்டுக் கண்டார் நடுநடுங்கும்படி வீதிவழியே சென்று அங்கு நின்ற மகளிரை நோக்கிப் பலவாறு புலம்பி வெட்டுண்டு கிடந்த கோவலனைச் சிலர் காட்டக்கண்டு அளவுகடந்த துன்பத்திலாழ்ந்து அவனை முன்னிலைப்படுத்திப் பலவாறு பிரலாபித்து அவனுடம்பைத் தழுவிக்கொள்ளவும், அவ்வளவில்