பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

II . மணிமேகலை வரலாறு.

காவிரிப்பூம் பட்டினத்தே பெருங்குடிவாணிகர் மரபிலுதித்த கோவலனுக்கு, மாதவியென்னும் நாடகக்கணிகையிடம் மணிமேகலை என்பவள் பிறந்திருந்தனள். இவள் தாயாகிய மாதவி, தன் காதலனான கோவலன் மதுரையிற் கொலையுண்டிறந்தது கேட்டுத் தன் குலத்தொழிலை முற்றும் வெறுத்துப் பௌத்தமுனிவராகிய அறவணவடிகளைச் சரணமடைந்து அவரால் வாய்மை நான்குஞ் சீலமைந்தும் உபதேசிக்கப்பெற்றுப் பௌத்தசங்கத்தைச் சேர்ந்து பிக்ஷுணியாயினள். அவள் மகள் மணிமேகலையோ, தன் தாயுடன் பழகி வந்ததாற் சிறுபிராயத்தே பெளத்த தருமங்களை அறிதற்கேற்ற உணர்ச்சி பெற்றிருந்தாள். ஒருநாள் மணிமேகலை தாயின் கட்டளைப்படி தன் தோழியாகிய சுதமதியுடன் பூக்கொய்து வருவதற்கு உபவனஞ்செல்ல, ஆங்குத் தன்னை விரும்பிவந்த சோழன் - கிள்ளிவளவன் மகனாகிய உதயகுமரனுக்கு அஞ்சியவளாய், ஆங்கிருந்த பளிக்கறையொன்றிற் பதுங்கியிருந்து அவன் போயினபின்பு வெளியே வந்தாள். பின்னர், அவள் குலதேவதையான மணிமேகலா தெய்வம் தோன்றி, மணிபல்லவம் என்னுந்தீவிற்கு அவளை அழைத்துக் கொண்டு போயிற்று. அத்தீவிற்சென்ற மணிமேகலை அங்குள்ள புத்த பீடிகைக்காட்சியால் தன் பழம்பிறப்பில் நிகழ்ந்த விசேடங்களை அறிந்ததோடு, அத்தெய்வம் அறிவுறுத்திய மூன்று மந்திரங்களை உணர்ந்து, முற்பிறப்பில் தன் கணவனாகவிருந்த இராகுலன் என்பவனே இப்பிறப்பில் உதயகுமாரனாக வந்தான் என்பதையும் அத்தேவதையால் அறிந்தனள். பின்னர், அப்பீடிகையின் காவற்றெய்வமான தீவதிலகையி-