5-ம் அதிகாரம் :—
செங்குட்டுவனது
வட நாட்டியாத்திரை .
1. குன்றக்குரவை.
வேடுவர் தங்கள் குறிச்சியில் கண்ணகி பொருட்டுக்
குரவைக் கூத்தாடியது.
கண்ணகி தன் கணவனையிழந்த பெருந்துயரோடும் வையைக்கரை வழியே மேற்றிசை நோக்கிச் சென்று, செங்குன்று என்னும் மலையடைந்து ஆங்கு ஒரு வேங்கைமரத்தின் கீழேநிற்ப, அவ்விடத்திருந்த மலைவேடுவரிற்சிலர் அக்கண்ணகியை நெருங்கி அவளை நோக்கி, ‘மலைவேங்கை நறுநிழலின் வள்ளி போல்வீர் மனநடுங்க—முலையிழந்து வந்து நின் நீர் யாவிரோ?’ என்று கேட்ப, அதற்கவள் சிறிதுங் கோபியாமலே, ‘மணமதுரையோ டரசுகேடுற வல்வினைவந் துருத்தகாலைக்—கணவனையங் கிழந்துபோந்த கடுவினையேன் யானென்றாள்’ இங்ஙனம் கண்ணகி கூற, மலைவாணர்கேட்டு அஞ்சி அவளை வணங்கிநின்றபோது, தேவர்குழாம் ஆங்கு வந்து மலர்மழை பொழிந்து அங்குள்ளவர் கண்முன்பே கண்ணகிக்கு அவள் கணவன் கோவலனைக்காட்டி, அவளையுமுடனழைத்துக்கொண்டு விண்ணுலகஞ் செல்வாராயினர். இவ்வற்புத நிகழ்ச்சியை நேரிற்கண்டு களித்த அவ்வேடுவர், இங்கு வந்து நின்ற மாதராள் நம் குலத்துக்கே ஒரு பெருந் தெய்வமாவள் ; இவள் பொருட்டு நாம் குரவையாடிக்கொண்டாடுவோம்’ என்று, தம்மவரையெல்லாம் ஒருங்கழைத்து —