பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடநாட்டியாத்திரை

65

சூட்டடிக் கதிர்களாகவுங் கொண்டு, வாளையுடைய தான் உழவனாக நின்று அப்போரிலே[1] அதரிதிரித்துக்கலக்கினான் செங்குட்டுவன். இவ்வரசனது மறக்களத்தைப் புகழ்ந்து, பேய்களெல்லாம் நெடியகைகளைத் தம் கரியதலைமிசை உயர்த்தியவைகளாய், திருமால் பாற்கடல் கடைந்தபோது நிகழ்த்தியதேவாசுரயுத்தத்தையும், அவன் இலங்கையில் நடத்திய போரையும், தேரூர்ந்து நிகழ்த்திய அவனது பாரதச்செருவையும் இதனோடு ஒரு சேரவைத்துப் பாடியதுடன், இப்போர்க்களத்தே பகைவரது முடித்தலைகளையே அடுப்பாகவும், பிடரிகளையே தாழியாகவும், வலயமணிந்த தோள்களையே துடுப்பாகவும் கொண்டு சமைத்த ஊன்சோற்றைப் பேய் மடையன் அவ்வப்பேயின் தகுதியறிந்து பரிமாற வயிறார் உண்டு களித்துத், தருமயுத்தத்தால் தமக்கித்தகைய பெருவிருந்து செய்த செங்குட்டுவனை ‘ஊழியளவு வாழ்க’ என்று வாயார வாழ்த்துவனவும் ஆயின.

இங்ஙனமாக, ஆரியப்படையை வென்று தானினைத்த காரியங்களுளொன்றை முடித்துக்கொண்ட செங்குட்டுவன் தன் தானைத்தலைவனான வில்லவன்கோதையை நோக்கி, வட திசையுள் நான்மறையாளரும் நித்யாக்கினி வளர்த்தலையே பெருவாழ்வாக உடையவருமாகிய அந்தணப் பெரியோரைச் செல்லுமிடங்களிலெல்லாம் போற்றிக் காக்கக் கடவீர்’ என்று கூறிப் பெரும்படையுடன் அவனையேவி, பத்தினிக் கடவுளைப் பொறித்தற்குரிய சிலையை இமயமலையினின்று கொண்டுவரும்படி செய்து அக்காரியத்தையும் முடித்துக் கொண்டனன்.



  1. நெற்களத்திற் கடாவிட்டுழக்குதல்.