பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடநாட்டியாத்திரை

69


முனிவருடைய பொதியமலையை வலஞ்செய்துகொண்டு கன்னியாகுமரித்துறையிற் றீர்த்தமாடி மீண்டு வருகின்ற யான், என் ஊழ்வினைப் பயன் போலும், பாண்டியனது மதுரைமா நகரம் சென்றேன். அங்கே நான் தங்கியபோது, பாண்டியன் தன்கணவனை அநியாயமாகக் கொல்வித்த கொடுங்கோன்மையைத் தன் சிலம்பைக்கொண்டு அவ்வரசனுக்கு விளக்கி வழக்காடி வென்றாள் கண்ணகி என்ற செய்தி ஊர்முழுதும் பரவியது. இக்கொலைச் செய்தி கேட்ட ஆய்ச்சியர்தலைவியாகிய மாதரி (கோவலன் கண்ணகியை அடைக்கலமாகப் பெற்றவள்) இடைத்தெருவிலுள்ள தாதெருமன்றத்தினின்றும் எழுந்து சென்று, ‘இடைக்குலமக்காள் ! அந்தோ, அடைக் கலப்பொருளை இழந்து கெட்டேன்; கோவலன் குற்றமுடையவனல்லன் ; அரசனே தவறினான் ; செங்கோலும் வெண்குடையும் இங்ஙனம் பிழைப்படுங்காலமும் நேர்ந்தனவோ !’ என்றலறி இரவின் நடுச்சாமத்தே எரியிற்புகுந்து மாய்ந்தனள். கோவலன் கண்ணகி இருவரையும் தம்முடனழைத் துக்கொண்டு மதுரை வந்த கவுந்தியடிகள், கோவலனை அரசன் கொலை செய்தது கேட்டதும் உண்டாகிய பெருஞ்சீற்றமானது அவ்வரசனது மரணத்தால் மாறியதாயினும், ‘என் அன்புக்குரிய இவர்கட்கு இவ்வினையும் வரக்கடவதோ’ என்றி ரங்கி உண்ணாநோன்பு கொண்டு உயர்கதியடைந்தனள். அன்றியும், கண்ணகியின் சீற்றத்தால் மதுரைமாநகரம் எரிக்கப்பட்டது. இவற்றையெல்லாம் மதுரையில் நேரிலுணர்ந்த யான், பின்பு என்னூராகிய காவிரிப்பூம்பட்டினம் சென்று , என்னண்பனான[1] கோவலன் கொலை முதலியவற்றால் யான-


  1. கோவலனுக்கு இவன் நண்பனென்பதும், மதுரையில் அவனுடன் இவ்வந்தணன் அளவளாவியதும், இந்நூல் 88-ம் பக்கத்துக்காண்க.