பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98 சேர மன்னர் வரலாறு



பெருஞ்சோற்றுதியன் வேறு, இமயவரம்பன் தந்தையான உதியஞ்சேரல் வேறு என்றதற்குக் காரணம் உண்டு. இமயவரம்பன் தந்தையை, “மன்னிய பெரும் புகழ் மறுவில் வாய்மொழி, இன்னிசை முரசின் உதியஞ் சேரல் என்று பதிற்றுப்பத்தின் இரண்டாம் பதிகம் - கூறுகிறதேயன்றி, பெருஞ்சோற்றுதியஞ் சேரலாதன் என்று கூறவில்லை. பழந்தமிழ் வேந்தரின் வரலாறுகளை ஆங்காங்குப் பெய்து கூறும் இயல்பினரான மாமூலனார் பாட்டு, “துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ்சேரல் பெருஞ்சோறு கொடுத்த ஞான்றை[1]” என்று பொதுப்படக் கூறுவதனால், பாரதப் போரில் பெருஞ்சோறு அளித்த குறிப்பு மாமூலனார்க்கு இல்லையென்பது விளங்குகிறது.

“இடம் சிறிதென்னும் ஊக்கம் துரப்ப”, தென் பாண்டிக் குமரிப்பகுதியையும் கொங்கு நாட்டுப் பகுதியையும் வென்று “நாடுகண்[2] அகற்றிய செயலால் பெரும்புகழ் பெற்ற குறிப்பை “மன்னிய பெரும்புகழ்” என்று பதிகம் கூறிற்று. முடிநாகனாரும், “நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின், குடகடற் குளிக்கும் யாணர் வைப்பின் நன்னாட்டுப் பொருந” என்பதனால் நாடு கண்ணகற்றிய திறமே கூறினாராயிற்று. இவ்வாறே, போர்க்களத்தில் இயவரைக் கொண்டு இவ்வாறே, போர்க்களத்தில் இயவரைக் கொண்டு ஆம் பலங்குழலை இயம்புமாறு செய்தான் உதியஞ்சேரல் என


  1. அகம். 233.
  2. நாடுகண் அகற்றுதலாவது நாட்டின் பரப்பிடத்தை மிகுதிப்படுத்துவது.