பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் 99



இளங்கீரனார் கூறிய குறிப்பே “இன்னிசை முரசின் உதியஞ்சேரல்” என்ற பதிகக் கூற்றிலும் காணப்படுகிறது. இதனால், இமயவரம்பன் தந்தையான உதியஞ் சேரல் வேறு, பெருஞ்சோற்றுதியஞ் சேரலாதன் வேறு என்பது காணப்படும்.

கொங்கு நாட்டிலும் தென்பாட்டி நாட்டிலும் உதியஞ்சேரல் செய்த போர்ச்செயல்களையும், அக் காலத்தே தனக்குத் தீங்கு செய்ய முயன்ற பகைவர், பின்பு புகலடைந்தபோது அவர்கள் பகைத்துச் செய்த வற்றை நினையாது பொறை மேற்கொண்டு ஒழுகியதும், தன்னை வெல்வது கருதிப் பகைவர் செய்த சூழ்ச்சிகளை . முன்னறிந்து, அவை அவர்கட்குப் பயன்படாவாறு, தான் முன்னே தகுவன சூழ்ந்து வெற்றி பெற்றதும், எதிர் நின்று பொருபவர் எத்தனை முயன்றும் கடைபோக நிற்கமாட்டாது கெடுமாறு மோதும் உதியனது வலியும், பொறுக்கலாகாத குற்றம் செய்தாரைத் தமது குற்றம் உணர்ந்து திருந்தி அமையுமளவாகத் தெறும் தெறலும், தன்பால் அன்புடையார்க்குத் தண்ணியனாய்ச் செய்யும் அருளும் முடிநாகனார் நேரே கண்டன. நிலவுலகத்து வாழும் மக்கட்கு இறைவனாய்த் திகழும் வேந்தன், உலகத்தின் கூறுகளான நிலம் ஐந்தன் இயல்புகளையும் உடையனாதல் வேண்டும்; மக்கள் உடல் நிலை பெறுதற்கு முதலிய ஐந்தும் ஆதாரமாவதுபோல, உயிர் வாழ்வுக்கு அரசனது ஐவகை இயல்பும் ஆதாரமாம் என்பது அரசியலின் அடிப்படை; இவ்வைந்தன் இயல்பும் உதியன் பால் காணப்பட்டமையின், “வேந்தே, நீ பொறையும் சூழ்ச்சியும் வலியுமாகிய எல்லாம்