பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் 101



நிற்கும் நான்மறைகள் நெறி திரியுமாயினும் நின்பால் அன்புடைய நின் சுற்றத்தாரோடு அன்புதிரியாது, புகழ்மிகுந்து, அருங்கடன் இறுக்கும் அந்தணர் உறையும் வடஇமயமும் தென் பொதியிலும் போல நிலைபெறு வாயாக” என்று வாழ்த்தினார்.

இதனால் மகிழ்ச்சி மிகுந்த உதியஞ்சேரல் முடிநாகனார்க்குப் பெருஞ்சிறப்புச் செய்தான். அவரும் ஏனைப் பரிசிலரும் பெருவளம் பெற்று இன்புற்றனர். முடிநாகனாரது முரஞ்சியூர் அவர்க்கே உரியதாயிற்று. அதுவே இப்போது முரிஞ்யூர் என மருவிநிலவுவதுடன் அது கொச்சி வேந்தர் குடியின்கண் தொடர் புற்றிருப்பதும் குறிக்கொண்டு அறியத்தக்கதொன்று.

இறுதியாக ஒன்று கூறுவதும்; இளங்கீரனார் என்னும் சான்றோர், ஒருகால் பெருஞ்சோற்றுதியானது போர்க்களத்துக்குச் சென்றார். அங்கே போர் முரசின் முழக்கத்தூடே ஆம்பங்குழலை இயவர் இசைத்தனர். கன்னெஞ்சையும் நீராய் உருக்கும் அக் குழலிசையால் போர் மறவரது நெஞ்சம் சிறிதும் பேதுறாது மறத்தீக் கொழுந்துவிட்டு எரிவது கண்டார். இனிய இசைக்கு உருகாத அளவில் மறவர் நெஞ்சம் மாறியிருந்தமையின், அம் மாற்றக் குறிப்பினைத் தக்கோரைக் கேட்டு உணர்ந்தார்.

முன்பு ஒருகால் சேரவேந்தர் வானவாசி நாட்டவரோடு போர் செய்யவேண்டியவராயினர். அவர்கள் சேரர்க்குரிய கொண்கானம் கடந்து குட நாட்டின் எல்லையிற் புகுந்து குறும்பு செய்து அலைத்தனர். அவர்களை வெருட்டுவது குறித்துச்