பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104 சேர மன்னர் வரலாறு



5. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்

குடநாட்டில் மாந்தை யென்பது அந் நாளில் தலைநகரமாக விளங்கிற்று. குடக்கோக்கள் அதன்கண் இருந்து அரசுபுரிந்தனர். மாந்தைநகர் இப்போது மாதையென்ற பெயருடன் கண்ணனூர்க்கு வடமேற்கில் 13½ கல் அளவில் இருந்து தனது முதுமையைத் தோற்றுவித்துக் கொண்டுளது; பழையங்காடியென்னும் புகைவண்டி நிலையம் இதன் ஒரு பகுதி ; இங்குள்ள பழங்கோயில் இதன் தொன்மையைக் காட்டுகிறது; இது பற்றி நிலவும் பழைய மலையாளப் பாட்டொன்று, இதன் கண் பண்டை நாளில் கோட்டையும் அரண்களும் இருந்த குறிப்பைத் தெரிவிக்கிறது[1]. இந் நகரைப் பண்டைச் சான்றோர், “நன்னகர் மாந்தை[2]” “துறை கெழு மாந்தை”, “கடல்கெழு மாந்தை[3]” என்றெல்லாம் பாராட்டி யுரைப்பர்.

பெருஞ்சோற்றுதியன் குட்டநாட்டு வஞ்சிநகர்க் கண் இருந்து ஆட்சி செய்கையில் நெடுஞ்சேரலாதன் மாந்தை நகர்க்கண் இருந்து நாடு காவல் புரிந்து வந்தான். உதியன் இறந்தபின் தான் சேரமானாய் முடிசூட்டிக் கொண்டு மாந்தை நகரிலேயே தங்கினான்; தன் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவனை வஞ்சி நகர்க் கண்ணே நாடு காவல் செய்து வருமாறு ஏற்பாடு செய்திருந்தான்.


  1. K.P.P. Menon’s History of Kerala Vol. i.p. 15.
  2. அகம். 127.
  3. நற். 35. 395.