பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108 சேர மன்னர் வரலாறு



பெரும் படைகளை விடுத்துத் துணை செய்தனர். இமயச் செலவுக்கெனச் சேரநாட்டிலும் பெரும்படைதிரண்டது. யானை, குதிரை, தேர் என்ற படைவகைகளும் வில் வேல்வாள் முதலியன் ஏந்தும் படைவகைகளும் அணியணியாய் இமயம் நோக்கிப் புறப்பட்டன. இவ்வாறு எழுந்த சேரப்படையுடன் சோழப்படையும் பாண்டிப்படையும் கலந்து கீழ்க்கடலும் தென்கடலும் மேலைக் கடலும் ஒன்று கூடி இமயம் நோக்கி யெழுந்ததுபோல நிரந்து செல்லலுற்றன.

அந் நாளில் கொண்கானத்துக்கும் வடவிமயத் துக்கும் இடையிற் கிடந்த நாடு ஆரியகம் என்ற பெயர் பெற்று விளங்கிற்று. அந் நாளிற் போந்த மேலைநாட்டு யவனர் குறிப்புகளும் அப் பகுதியை ஆரியகம் (Ariake) என்றே குறித்துள்ளன. ஆங்கு வாழ்ந்த சதகன்னரும் மோரியருமாகிய ஆரிய மன்னர் தமிழ்ப்படையின் வரவுகண்டு இறும்பூதெய்தினர். படையின் பெருமை அறியாது பகை கொண்டு எதிர்த்த வேந்தர் சிலர் வலி தொலைந்து ஒடுங்கினர்; பலர் பணிந்து திறைதந்து நண்பராயினர் நெடுஞ்சேரலாதன் நினைந்தது நினைந்தவாறே நிறைவேறியது பற்றி மனம் மகிழ்ந்து இமயத்தில் தன் விற்பொறியைப் பொறித்துவிட்டுத் திரும்பினான். ஆரிய நாட்டினர் கொடுத்த பொன்னும் பொருளும் பொற்பாவைகளும் இமயச் செல்வின் ஊதியமாகச் சேர நாடு வந்து சேர்ந்தன. சேரமான், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்ற நெடும் புகழால் சிறப்புற்றான். தன்னொடு போந்த தானைத் தலைவர் கட்கும் துணைவர் கட்கும் பரிசிலர்க்கும் தக்க வரிசை