பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110 சேர மன்னர் வரலாறு



மரத்தைக் காவல் மரமாகப் பேணி வந்தமையின் அவர்கள் கடம்பர்கள் என வழங்கப்பட்டனர். கடலில் கலஞ் செலுத்துவதும் மீன்பிடிப்பதும் அவர்கள் மேற் கொண்டிருந்த தொழில். கடம்ப வேந்தர் சிலருடைய செப்பேடுகளில் மீன்கள் பொறிக்கப்பட்டிருப்பதும், கோவாத் தீவில் பழங்கோவா என்ற பகுதியிற் காணப்படும் வீரக்கல் ஒன்றில் கடற்படை யொன்று நாவாய் ஏறிப் போருடற்றும் ஓர் இனிய காட்சி பொறிக்கப்பட்டிருப்பதும்[1] அவர்களுடைய பண்டை நாளைத் தொழில் வகையை நன்கு தெரிவிக்கின்றன. சங்க காலத்தேயே தோற்றமளிக்கும் இக் கடம்பர்கள் இடைக்காலத்தில் கொண்கானம், கருநாடகம், கலிங்கம் என்ற இந்த நாடுகளில் அரசு நிலையிட்டு வாழ்ந்து, கி.பி. பதினான்காம் நூற்றாண்டின் இடையில் பெருவிளக்கம் பெற்றுத் திகழ்ந்த விசயநகர வேந்தரது ஆட்சியில் மறைந்தொழிந்தனர்.[2] இவர்களுடைய கல்வெட்டுக்களும், செப்பேடுகளும் வட கன்னடம், தென் கன்னடம், குடகு, மைசூர், ஆந்திர நாடு என்ற பகுதிகளில் காணப்படுகின்றன.

கடம்பர்கள் கடம்ப மரத்தைக் காவல்மரமாக ஓம்பிக் கடலகத்தே வாழ்ந்தனர் எனச் சங்க இலக்கியங்கள் குறித்துக் காட்டவும், இக் கடம்பர்களுடைய இடைக்காலச் செப்பேடுகளும் பிறவும் பெளராணிக முறையில் அவர்கட்குத் தொன்மை கூறுகின்றன. பம்பாய் மாகாணத்துப் பெல்காம் பகுதியிற் கிடைத்


  1. Ep. Indica Vol xiii. p. 309.
  2. Rice Mysore Vol. i.p. 299, 300.