பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114 சேர மன்னர் வரலாறு



பற்றி, கடல் நடுவண் சென்று அவர் தம் அரண்களை அழித்து அம் மாமரத்தையும் தடிந்து ஊர்களைத் தீக்கிரையாக்கி வாகைசூடி வந்த முருகவேள், தான் பெற்ற வெற்றிக் குறியாகப் பிணிமுகம் என்னும் யானைமேல் இவர்ந்து உலாவந்தாற் போல, கடம்பரது அரணை அழித்து அவர் பலராய் மொழிந்து காத்த கடம்பரத்தைத் தடிந்து அதனாற் போர்முரசு செய்து போந்த சேரலாதனே! தென் குமரிக்கும் வட இமயத் துக்கும் இடைநிலத்து வேந்தர் மறம்கெடக் கடந்து யானையூர்ந்து சிறக்கும் நின் செல்வச் சிறப்பைக் கண்டு யாங்கள் பெருமகிழ்ச்சி எய்துகின்றோம்.[1]

“நீ வென்ற கடம்பர் எளியவரல்லர்; தம்மை நேர் நின்று எதிர்க்கும் வயவர் தோற்று வீழ, வாட்போர் செய்து அவரது நாட்டைக் கவர்ந்து கொள்ளும் ஆற்றல் மிக வுடையவர்; அத்தகைய ஆற்றலமைந்த தானை யொடு வந்து எதிர்த்த அவர்களைக் கெடுத்து வலியழித்து அவரது கடம்பினையும் வேரொடு தொலைத்து, வீழ்த்திய நின் வீறுபாட்டினைக் கேட்ட ஏனைத் திசைகளில் வாழும் வேந்தர்கள், அடல்மிக்க அரியேறு உலவுவது தெரிந்த பிற விலங்குகள், அஞ்சி அலமருவது போல, இரவும் பகலும் கண்ணுறக்கம் இன்றிக் கலங்கஞர் எய்தியிருக்கின்றனர். இதனை நேரிற் கண்டு வியப்பு மிகுந்த என் சுற்றத்தார், காடு பல கடந்து தம்மை வருத்தும் வறுமைக் துயரையும் நினையாது, என்னோடு போந்து நீ தந்த சோறும் கள்ளும் நல்லுடையும் பெற்று,


  1. பதிற். 11.