பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் 117



பொறாமையை உண்டுபண்ணிற்று. கடலகத்துத் தீவுகளில் வாழ்ந்த கடம்பருட் சிலர் நாட்டில் புகுந்து சேரமானுக்கு மாறாக ஆரிய வேந்தரொடு கலந்து பகை சூழலுற்றனர். அந் நாளில் யவன நாட்டவர் கலங்களிற் போந்து வாணிகம் செய்தமையின், அவருட் சிலரொடு நட்புக் கொண்டு, இமயவரம்பனுக்கு மாறாகப் போர் தொடுக்குமாறு அக் கடம்பர்கள் அவர்களைத் தூண்டினர். உண்மை அறியாத யவனர், ஆரியரும் கடம்பரும் செய்த துணை பெற்று இமயவரம்பனோடு போரிட்டனர். போர் கடுமையாக நடந்தது. சேரர்படை கடலிற் கலஞ் செலுத்திப் பொருவதிலும் சிறந்திருந் தமையால் யவனர் நிலத்தில் கால்வைத்தற்கு வழியின்றிச் சீரழிந்தனர். அவருட் பலர் சிறைபட்டனர்; நேர்மையும் பணிவும் அமைந்த சொற்செயல்களால் நெடுஞ்சேர லாதன் அருட்கு இலக்காகாத பகைவர் கடுந் தண்டத்துக்கு உள்ளாயினர். மிக்க குற்றம் செய்தவரைக் கைப்பற்றி அவர் தம் இருகைகளையும் முதுகின் புறத்தே சேர்த்துக் கட்டித் தலையில் நெய் பூசித் தன் நகரவர் காண நெடுஞ்சேரலாதன் கொண்டுவந்தான். மற்றை யோர், பொன்னும் வயிரமுமாகிய மணிகளைக் கொணர்ந்து கொடுத்துச் சேரலாதனது அருளைப் பெற்றனர். அவன் அவற்றைப் படை மறவர்க்கும் தானைத் தலைவர்க்கும் துணைவர்க்கும் பரிசிலர்க்குமே நல்கினான். இதனைப் “பேரிசை மரபின் ஆரியர் வணக்கி , நயனில் வன்சொல் யவனர்ப் பிணித்து நெய் தலைப்பெய்து கையிற் கொளீஇ அருவிலை நன்கலம் வயிரமொடு கொண்டு, பெருவிறல் மூதூர்த் தந்து