பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் 123



பகர்வரேல் ஏற்றுக் கொண்டு அவர்கள்பால் செல்லும் சினத்தை நீக்கி, நீ சீரிய அருள் செய்கின்றாய்; நின் அருட்கு ஒப்பதும் உயர்ந்ததும் நினைக்குங்கால் நின் அருளல்லது பிறிது யாதும் இல்லை[1]” என்ற கருத்தை அப் பாட்டுத் தன்னகத்துக் கொண்டு விளங்குவ தாயிற்று.

நெடுஞ்சேரலாதன் போர் பல செய்து வெற்றி மிகுந்து புகழ் பரவ வீற்றிருந்தமை அறிந்து, பாணர் பொருநர் கூத்தர் முதலிய பரிசிலர் கூட்டம் அவனது நகர் நோக்கி வெள்ளம் போல் வந்தது. சேரலாதனும் அவர்கட்குப் பெருவளம் நல்கிச் சிறப்பித்தான். ஒருகால், கண்ணனார், பாணர் முதலியோருடைய கூட்டத்துக்கு இடையே சென்று அவரது மன நிலையைக் கண்டார். அவர்பால் கடும்பற்றுள்ளம் சிறிது தோன்றியிருந்தது; உள்ள பொருள் செலவாய்விடின் மேலே பெறுவது அரிது என்ற உணர்வு சிலருடைய நெஞ்சில் நிலவுவதை அவர் கண்டார். அவர்கட்கு இமயவரம்பனது வள்ளன்மையை எடுத்துணர்த்த வேண்டிய இன்றி யமையாமை பிறந்தது. விறலியரை நோக்கி, “விறலியரே, பற்றுள்ளம் கொள்ளாது வருவோர்க்கு வரையாது கொடுமின்; நிரம்பச் சமைமின்; உணவேயன்றி வேறு பிற பொருள்களையும் நெடுஞ்சேரலாதன் முட்டின்றி நல்குவான்; ஆதலால், பிற கலன்களையும் பிற இரவலர்க்கு வழங்குமின்; பெற்றது குறையுமென அஞ்சாது நல்குமின்; சேரலாதன் மிகுதியாகத் தருவன்;


  1. பதிற். 17.