பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124 சேர மன்னர் வரலாறு



நீர் பொய்ப்பினும் சேரலாதன் கொடை பொய்யாது; ஆகவே, நன்றாக உண்மின்; அடுமின்; எல்லோர்க்கும் கொடுமின்[1]” என்று தெருட்டி ஊக்கினர். அப்போது, அக் கூட்டத்தில் இருந்த ஒருவர், கண்ணனாரை நோக்கி, “இமயவரம்பனது கொடைநலம் அறிந்தோர் போலக் கூறும் நீரும் எம்மனோர் போலப் பரிசிலர் எனக் காணுகின்றீர்; நுமது அரசன் யாவன், கூறுவிரோ?'’ என்று கேட்டார். அதற்கு விடை கூறலுற்ற கண்ண னாரது உள்ளம் பெருமகிழ்வு கொண்டது. சேரலாதனது சிறப்பை எடுத்துரைத்தற் கேற்ற வாய்ப்புக் கிடைத்தது பற்றி அவர் பெருமிதம் எய்தினார்.

“நுமக்குக் கோவாவான் யார் என வினவு கின்றீர்கள்; எங்கள் வேந்தன், கடலகம் புகுந்து, அங்குள்ள தீவினுள் வாழ்ந்த திறல் மிகுந்திருந்த கடம்பரது கடம்பினை வேரோடு தடிந்து புகழ் மேம்பட்ட நெடுஞ்சேரலாதன்; பகைப்புலத்தே பகைவர் தமது சூழ்ச்சியால் செய்யும் எத்தகைய வினையையும் அவர்கட்கு வாய்க்குமாறு இன்றிக் கருவிலேயே கெடுத்து வெற்றிமிகும் வினைத்திறம் வாய்ந்தவன்; உட்பகை செய்யும் ஒட்டார் முன்னும் பொய் கூறாத வாய்மை யுடையவன்; தன்னைக் காணும் பகைவர் உள்ளத்து ஊக்கம் கெடுமாறு பெருமிதத்துடன் நடந்து, அவரது நாட்டை வென்று தன்னைப் பாடும் பரிசிலர்க்கு நல்கும் பண்பினன்; குதிரைகளையும் பிறவற்றையும் பெருக வழங்கும் கொடைநலம் உடையவன்; மிளையும்


  1. பதிற். 18.