பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் 125



கிடங்கும் மதிலும் ஞாயிலுமுடைய பகைவர் பலருடைய நகரங்களை அழித்துத் தீக்கு இரையாக்கிய அவன், தன்பால் வருவோர், வல்லுநாராயினும், மாட்டாராயினும், யாவராயினும் நிரம்ப நல்கும் நீர்மை யுடையவன்; மழைமுகில் தான் பெய்யுமிடத்துத் தப்புமாயினும், சேரலாதன், பசித்து இரக்கும் இரவலர்க்கு வயிறு பசி கூர ஈயும் சிறுமையுடையவனல்லன்; அப் பெற்றியோனை நல்கிய அவனுடைய தாய் வயிறு மாசிலள் ஆகுக[1]” என்று இனிமையாகப் பாடினர். அச் சொற்களைக் கேட்ட பரிசிலர் பேரின்பம் எய்தினர். ஒற்றர் வாயிலாக வேந்தன் கண்ணனார் பாடிய பாட்டைக் கேட்டு அவர்பால் பேரன்பு கொண்டான்.

சேரலாதன் ஆட்சி நலத்தால் நாட்டில் வளவிய ஊர்கள் பல உண்டாயின. மக்கள் செல்வ வாழ்வு நடத்திச் சிறப்பெய்தினர். சான்றோர் பலர், அவனது ஆட்சி நலத்தை வியந்து போந்து அவனை வாழ்த்தினர். பொருளும் இன்பமும் அறநெறியிற் பெருகி நிற்கும் அரசினைக் கீழ்மக்களும் விரும்புவரெனின், சான்றோர் போந்து பாராட்டுவதில் வியப்பில்லையன்றோ!

நெடுஞ்சேரலாதனொடு நெருங்கிய நட்பாற் பிணிப் புண்டிருந்த கண்ணனார் அவனுடைய ஆட்சியால் நலம் எய்திய நாடு முற்றும் கண்டு மகிழ்ந்தார். அவன் தன்னொடு பகைத்து மாறுபாடு கொண்ட வேந்தர் நாட்டிற் படையெடுத்துச் சென்று, அவர்களை வென்றடங்கி, அவன் நாட்டைப் பாழ்


  1. பதிற். 20.