பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126 சேர மன்னர் வரலாறு



செய்வதையும் அவர் அறியாமலில்லை. போர்ப்புகழ் பெறுவதில் மகிழ்ந்து மைந்துற்று ஒழுகும் வேந்தர் உள்ளத்து மறவேட்கையை மாற்றி நாட்டு மக்கட்கு இன்பம் பெருக்கும் செயல்களில் ஈடுபடச் செய்வதை, அவ்வேந்தர்க்குச் சுற்றமாய்த் துணைபுரிந்த அந்நாளைச் சான்றோர் தமது கடமையாக மேற்கொண்டிருந்தனர். கண்ணனார் தமது கடமையை மறந்தார் இல்லை. காலம் வாய்க்குந் தோறும் நெடுஞ்சேரலாதனுக்குப் போரால் விளையும் கேட்டினை எடுத்துக்காட்டியே வந்தார். செய்த போர்களிலெல்லாம் இமயவரம்பன் வெற்றியும் பெருஞ்செல்வமும் பெற்றதனால், அவனது மனம் மறப் புகழையே நாடிநின்றது. மறவுணர்வை மாற்றுதற்கு அவர் எடுத்துரைத்த அறவுரைகள் கருதிய பயனைக் கருதிய அளவில் விளைக்கவில்லை . முடிவில், அவன் கருத்தை இன்பத் துறையில் செலுத்துவது ஓரளவு அவன் நெஞ்சில் நிலவும் மறவுணர்வை மாற்றும் எனக் கண்ணனார் எண்ணினார்.

இவ்வாறிருக்கையில், நெடுஞ்சேரலாதன், ஒருகால் வேந்தன் ஒருவனுடன் போர் தொடுத்து அவன் நாட்டிற் பாசறை யிட்டிருந்தான். அந் நிலையில் ஒருநாள் கண்ணனார் அவனுடைய பாடிவீட்டிற்குச் சென்றார். வேந்தன் அவர் வரவு கண்டு மகிழ்ந்தானாயினும், அவனுடைய குறிப்பு அவர் வந்த வரவின் கருத்தை அறிய விழைந்தது. ‘வேந்தே, நீ மேற்கொண்டிருக்கும் வினை, நினக்கு வருத்தம் பயக்கும் அத்துணைக் கொடுமையுடையதென அஞ்சி யான் வந்தேனில்லை; மலைபோல் உயர்ந்த புறமதிலும், அகன்ற இடைமதிலும்,