பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் 131



அச் சிறப்பின் நினைவுக் குறியாகச் சிறப்புடைய ஊரொன்றைக் கண்ணன் பட்டோலை என்று மக்கள் வழங்கத் தலைப்பட்டனர். இப்போதும் குடநாட்டின் தென் பகுதியில், பாலைக்காட்டு வட்டத்தைச் சேர்ந்த தென்மலைப்புறம் என்ற பகுதியில் இந்தக் கண்ணன் பட்டோலை என்ற ஊர் இருந்து வருகிறது.

இச் சிறப்புப் பெற்ற கண்ணனார்க்கு இமய வரம்பன் பால் உண்டான அன்புக்கு எல்லையில்லை. அவனை வாயார வாழ்த்த வேண்டும் என்ற எண்ணம் அவர்க்கு உண்டாயிற்று. “சேரலாதனே, நிலமும் நீரும் வளியும் விசும்பும் போல், நீயும் அளப்பரிய பண்புகள் கொண்டவன்; தீயும் ஞாயிறும் திங்களும் பிற கோள் களும் போல ஒளியுடையவன்; பாரதப் போரில் பாரத வீரர்கட்குத் துணை செய்து உயர்ந்த அக்குரன் போன்ற கைவண்மை உன்பால் உளது; நீயோ போரில் பகைவர் பீடழித்த முன்பன்; மாற்றலாகாதது எனப்படும் கூற்றையும் மாற்றவல்ல ஆற்றல் உனக்கு உண்டு. நீ சான்றோர்க்கு மெய்ம்மறை : வானுறையும் மகளிர் நலத்தால் நிகர்ப்பது குறித்துத் தம்மில் இகலும் பெருநலம் படைத்த நங்கைக்குக் கணவன் ; களிறு பூட்டிப் பகைப்புலத்தை உழும் அயில்வான் உழவன்; பாடினியைப் புரக்கும் வேந்தன். நின் முன்னோர் இவ்வுலகு முழுதும் ஆண்ட பெருமையுடையார்; அவர்களைப் போல நீயும் பெரும்புகழ் பெற்று வாழ்வாயாக[1]” என வாழ்த்தினார்.


  1. பதிற். 14.