பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் 133



பற்றுவதில் தலைசிறந்தவர். அவர்கள் குட்டநாட்டுக் குட்டுவரது ஆட்சியின் கீழிருந்து அவர்கட்குப் பெருந் துணை புரிந்தனர். அதனால் குட்டுவன் படையில் ஏனைப் படைவகை பலவற்றிலும் யானைப்படையே சிறந்திருந்தது. அச் சிறப்புப் பற்றிக் குட்டுவன், பல்யானைச் செல்கெழு குட்டுவன் என்று சான்றோர் வழங்கும் சால்பு பெற்றான்.

குட்ட நாட்டின் வட பகுதிக்கு நேர் கிழக்கில் நிற்கும் வடமலைத் தொடரின் மலைமிசைப் பகுதிக்குப் பாயல் நாடு என்பது அந் நாளில் வழங்கிய பெயர். அப் பாயல் நாட்டின் கீழ்ப் பகுதியில் இப்போது நும்பற்காடு என வழங்கும் உம்பற்காட்டில் குறுநிலத் தலைவர் சிலர் வாழ்ந்துவந்தனர். வடக்கே இமய வரம்பனது புகழ் மிகுவது கண்டு, அவர்கள் பொறாமை மிகுந்து குட்ட நாட்டிற் புகுந்து குறும்பு செய்தனர். அக் காலத்தே இப்போது ஆணைமலைத் தொடர் என வழங்கும் தென்மலைப் பகுதியில் முதியர் என்பார் வாழ்ந்து வந்தனர் உம்பற்காட்டுக் குறுநிலத் தலைவரது குறும்பு அவர் கட்கும் இடுக்கண் விளைத்து வந்தது.

உம்பற்காட்டின் வட பகுதியில் அகப்பா என்பது அதற்குத் தலையிடமாக இருந்தது. உம்பற்காட்டு வேந்தர் அகப்பாவில் இருந்து கொண்டு குட்டுவனுக்கு மாறுபட் டொழுகினர். இமயவரம்பன் வடவாரியரோடும் கடற்கடம்பரோடும் போரிட்டு ஒழிக்க வேண்டியிருந் தமையால், குட்டுவனே போர் மேற்கொண்டு உம்பற் காட்டுக் குறும்பரை வலியழிக்க வேண்டியவனானான். உம்பற்காட்டுக்குத் தலைநகரான அகப்பா, இப்போது