பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134 சேர மன்னர் வரலாறு



குறும்பர்நாடு வட்டத்திலுள்ள மீப்பா யூர்க்குக் கிழக்கில் இருந்திருக்குமெனக் கருதப்படுகிறது. இப் பகுதி இடைக் காலத்தே பாமலை நாடு என்றும் பாநாடு என்றும் வழங்கியிருந்து, பாயூர் மலைநாடென்று பின்னர் விளங்கிற்று. குறும்பர் நாடு வட்டத்தில் பாயூர் மலைநாடு ஒரு பகுதியாகவே இன்றும் உள்ளது. இப் பகுதியை மேலை நாட்டு யவனர் குறிப்பு பம்மலா (Bamnnala) என்று குறிக்கின்றது. இது வடக்கில் சிறைக்கல் வட்டம் வரையில் பரந்திருந்தது. அப் பகுதியில் இப்போது இரண்டு தரா நாடு எனப்படும் பகுதிக்குப் பழம் பெயர் பாநாடு என்று வழங்கின்று எனச் சிறைக்கல் வரலாற்றுக் குறிப்பில் வில்லியம் லோகன் என்பாரும் உரைக்கின்றார்.

அந் நாளில் அகப்பா என்னும் நகரம் உயரிய மதிலும் பெருங்காடும் அரணாகக் கொண்டு சிறந்து விளங்கிற்று. மிகப் பலவாய்த் திரண்ட யானைப் படையும் பிற படைகளும் உடன்வர , குட்டுவன் உம்பற் காட்டிற்குட் புகுந்தான். அவனது படைப் பெருமை அறியாது எதிர்த்த குறுநிலத் தலைவர் எளிதில் அவன் படைக்குத் தோற்றனர். அவர்களுட் பலர் குட்டுவன் அருள் வேண்டிப் பணிந்து திறை தந்து அவன் ஆணைவழி நிற்பாராயினர். ஆங்கு வாழ்ந்த முதியர் அவனுக்குப் பெருந்துணை புரிந்தனர். உம்பற் காட்டில் சேரரது ஆட்சி நடைபெறுவதாயிற்று.

உம்பற்காட்டைத் தன் குடைக்கீழ்க் கொணர்ந்து நிறுத்திச் சிறந்த குட்டுவற்கு அந் நாட்டுக் குறுநிலத் தலைவரும் முதியரும் துணைபுரிய, அவன் அதற்கு வடபாலில் உள்ள அகப்பா நோக்கிச் சென்றான்.