பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பல்யானைச் செல்கெழு குட்டுவன் 135



அகப்பாவிலிருந்து பகை செய்தொழுகிய வேந்தர் கடும்போர் உடற்றினர். குட்டுவன் உழிஞை சூடிச் சென்று அகப்பாவின் கடிமிளையும் கிடங்கும் நெடுமதிலும் பதணமும் சீர்குலைந்து அழியக் கெடுத்துப் பகை புரிந்தொழுகிய தலைவர் பலரைக் கொன்று வெற்றி கொண்டான். நாட்டின் பல பகுதிகள் குட்டுவன் படைத் திரளால் அழிவுற்றன. ஊர்கள் தீக்கிரையாயின்; அகப்பா நகரும் சீர்குலைந்தது. முடிவில் குட்டுவன், அப் பகுதியை முதியர் காவலில் வைத்துத் தன் கோற் கீழிருந்து ஆட்சி புரியுமாறு ஏற்பாடு செய்தான். இதனை மூன்றாம்பத்தின் பதிகம்,

“உம்பற் காட்டைத் தன்கோல் நிறீஇ
அகப்பா எறிந்து பகற்றீ வேட்டு
மதியுறழ் மரபின் முதியரைத் தழீஇக்
கண்ணகன் வைப்பின் மண்வகுத்து ஈத்து”

என்று குறிக்கின்றது.

இவ் வண்ணம் வென்றி மேம்பாட்டுச் சிறந்த குட்டுவன், வாகை சூடித் தன் நாடு திரும்பிப் போந்து, தான் பெற்ற வெற்றிக்காகப் பெருஞ்சோற்று விழாவைச் செய்தான், அப்போது சான்றோர் பலர் வந்தனர். குட்டுவனது அரசியற் சுற்றத்தாருள் நெடும்பாரதாயனார் என்ற சான்றோர் ஒருவர், அவ்வப்போது அவனுக்கு அரசியலறிவு நல்கி வந்தார். அவர் சிறந்த நல்லிசைப் புலமையும் உயர்ந்த கேள்வி நலமும் உடையவர். அவர் அவ் விழாவினை முன்னின்று நடத்தினார். அப்போது கோதமனார் என்னும் மற்றொரு சான்றோர் குட்டுவன்பால் வந்தார்.