பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142 சேர மன்னர் வரலாறு



காவிரியின் வடகரையில் வாழ்ந்த மழவர் பலர் தெற்கில் கீழ் கொங்கு நாட்டில் வந்து குடியேறியிருந்தனர் அவர்கள் மறப்பண்பு சிறந்து நின்றமை அறிந்து, கீழ் கொங்கு நாட்டில் வாழ்ந்த வேளிர் பலர், அவர்களைத் தமது படை மறவராகக் கொண்டிருந்தனர். கொங்கு நாட்டைக் குட்டுவன் அகப்படுத்தி, அங்கு வாழ்ந்த மழவரும் அவன் ஆணை வழி நிற்பாராயினர். அவர்கள் போர்த்துறையில் சிறந்து குட்டுவன் பாராட்டும் சிறப்பு எய்தியதனால் குட்டுவன் “குவியற் கண்ணி மழவர் மெய்ம்மறை[1]” என்ற சிறப்பை எய்தினான்.

இவ்வாறு குட்டுவரும் பூமியரும் கொங்கரும் மழவரும் ஆகிய பலவகை மறவர், தானை வீரராக மலிந்த பெரும்படை கொண்டு குட்டுவன் விளக்க முறுகையில் ஆங்காங்குச் சிற்சில தலைவர்கள் நின்று சிறு குறும்பு செய்தனர். அறியாமை காரணமாக அவர்கள் போர் தொடுத்தாராயினும், குட்டுவன், தன் பெரும் படை கொண்டு அவர்களை வலியழிப்பதில் சிறிதும் தாழாது ஒழுகினான். ஒருகால் குறுநிலத் தலைவன் ஒருவன் குட்டுவனைப் பணிந்தொழுகாது பகைத்தான். குட்டுவன் விடுத்த படை அவனது நாடு நோக்கிச் சென்றது. தூசிப்படை முற்படச் சென்று பகை வேந்தனது அரண்களை அழித்துச் செல்ல, குட்டுவன் அதன்பின் அணிவகுத்துச் செல்லும் தானைக்குத் தலைமை தாங்கிச் சென்றான். பகைவன் படைத்திரள், குட்டுவனது தூசிப் படைக்கு எதிர் நிற்கமாட்டாது உடைந்து கெட்டது; அப்


  1. பதிற். 21.