பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146 சேர மன்னர் வரலாறு



எடுத்தோதி இன்புறுத்துவார் போலப் பகைவரது நாடு அழிந்த திறத்தை விரித்துக் கூறலுற்றார். “வேந்தே, நீ போருக்குப் புறப்படுவாயாயின், போர்முரசம் இடிபோல் முழங்கும்; வானளாவ எடுத்த கொடிகள் அருவி போல் அசையும்; தேரிற் பூண்ட குதிரைகள் புள்ளினம் போலப் பறந்தோடும்; இப்படை புகுந்து அழிப்பதால் பகைவர் நாடுகள் கெடும் திறம் கூறுவேன்; குதிரைப்படை சென்ற புலங்களில் கலப்பை செல்லாது; யானைப்படை புக்க புலம் வளம் பயப்பதில்லை; படை மறவர் சேர்ந்த மன்றங்கள் கழுதையேர் பூட்டிப் பாழ் செய்யப்பட்டன; பகையரசர் எயில்கள் தோட்டி வைக்கப் பெறாவாயின; நின் படையினர் அந்த நாடுகளில் வைத்த தீ காற்றொடு கலந்து ஊரை அழித்தமையின், வெந்து பாழ்பட்ட இடங்கள் காட்டுக் கோழியும் ஆறலை கள்வரும் வாழும் பாழிடங்களாயின, காண்[1]” என்றார்.

பின்பொருகால் செல்கெழுகுட்டுவன் நாடு காணும் கருத்துடையனாய்ப் புறப்பட்டான். அவனுடன் கோதமனாரும் சென்றார். வழியில் நாடுகள் பலவற்றைக் கடந்து செல்லும்போது, பாழுற்றுக் கிடந்த நாடு ஒன்றைக் கண்டனர். அப்போது மறம் மிகுந்து மறலும் குட்டுவனது மனத்தை மாற்றும் கருத்தினரான கோதமனார், “இந்த நாடு பாழாய்க் கிடப்பதன் காரணத்தை யான் அறிவேன். இது முன்னாளில் வளம் சிறந்து விளங்கிற்று; இளமகளிர் குவளையும் ஆம்பலும்


  1. பதிற். 25.