பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பல்யானைச் செல்கெழு குட்டுவன் 147



விரவித்தொடுத்த தழையுடை உடுத்துத் தலையில் கண்ணி சூடி மரத்தின்மேல் ஏறியிருந்து வயல்களில் நெற்கதிரைக் கவரும் கிளி முதலியவற்றை ஓப்பதற்காக விளிக்குரல் எடுத்து இசைப்பர்; அப்போது பழனக் காவில் உறையும் மயில்கள், மகளிர் பாட்டிசைக்கு ஒப்ப ஆடும் ஆரவாரம் ஒருபால் எழும்; ஒருபால் பொய்கை களினின்றும் செல்லும் கால்களில் பூத்த நெய்தலை ஊதும் வண்டினம் எங்கு மொய்த்துக் கொண்டிருக்கும்; நன்செய்களின் விளைவை வண்டியில் ஏற்றிச் செல்வர்; அப்போது வண்டியின் சகடம் சேற்றிற் புதையும்; அதனைக் கிளப்பிச் செலுத்தும் வண்டிக்காரர் செய்கிற ஆரவாரம் ஒருபால் எழும்; இந்த நாடு இத்தகைய ஆரவாரங்களைக் கேட்டது உண்டேயன்றிப் போரார வாரம் கேட்டதில்லை; இப்போது நீ சிவந்து நோக்கிய தனால் இந்த அழி நிலையை எய்துவதாயிற்று[1]” என்றார்.

இவ்வாறு நாடுகள் சில அழிந்திருப்பது கண்ட குட்டுவனுக்கு நெஞ்சில் அசைவு பிறந்தது. “இந்த நாட்டு வேந்தர், போர் விளைந்தால் இத்தகைய அழிவு நேர்வதை அறியாது பகைத்துப் போர் தொடுத்தது பெருங் குற்றம்; வீடிழந்தும் விளைநிலங்களை இழந்தும் எத்தனையோ மக்கள் வருத்தம் எய்தினர்; இக் கேடு எய்தக்கண்டு மக்கள் மனம் கொதித்து வருந்தும் வருத்தத்தை நினைத்தால் கன்னெஞ்சமுடையாரும் கசிந்துருகுவர்” என்ற கட்டுரையும் இப் பேச்சிடையே பிறந்தது. “அரசியற் செல்வம் சிறந்தது என்பது


  1. பதிற். 27.