பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148 சேர மன்னர் வரலாறு



பொருந்தாது. நாட்டு மக்கட்கு இவ்வாறு துன்பம் எய்துவது அந்நாட்டு வேந்தர்க்குத் தீராக் களங்கமாகும்; அந்த நாட்டவர் வேந்தர்களை எவ்வளவில் வெறுப்பார் என்பது எண்ண முடியாத ஒன்று” எனக் குட்டுவன் வாய்விட்டுக் கூறி வருந்தினான்.

இவ் வண்ணமே இருவரும் சொல்லிக்கொண்டே செல்லுங்கால், மிக்க கேடடைந்த நாடு ஒன்றைக் கண்டனர். அதனைப் பார்த்த குட்டுவன் “இதுவும் பகை வேந்தர்பால் பொருது வென்ற நாடுதானே” என்றான்; “ஆம்” எனத் தலையசைத்த கோதமனார், “வேந்தே, இந்த நாடு யான் அறிந்த நாடுகளில் ஒன்று; நின் படைமறவர் புகுந்து போர் உடற்றிக் கைப்பற்றியதற்கு முன்னும் யான் இதனைக் கண்டிருக்கிறேன்; தேர்கள் இயங்குவதால் ஏரால் உழுவதை வேண்டாதே சேறுபடும் வயல்களும், பன்றிகள் உழுவத்தால் கலப்பையால் உழுவதை வேண்டாது புழுதிபடும் புன்செய்க் கொல்லைகளும், மத்து உரறுவதால் இன்னியம் இயம்ப வேண்டாத மனைகளும் பொருந்திய இதன் நலத்தைப் பண்டு நன்கு அறிந்தவர், அப்போது கண்பாராயின், பெரிதும் நெஞ்சு நொந்து வருந்துவர்; இந்த நாட்டு மக்கள் நல்ல மனப்பண்பு அமைந்தவர்; முருகன் வெகுண்டு அழித்ததால் செல்வக் களிப்பை இழந்த மூதூர்போல், நின் வீரர் சீறி அழித்ததால் இந் நாட்டில் மழையும் செவ்வே பெய்யாதாக, வெயிலின் வெம்மை மிகுவதாயிற்று; நாடும் நலம் பயவா தொழிந்தது; இங்கே வாழ்பவர், சீறி யழித்த நின்னையோ, நின் சீற்றத்துக்குரிய காரணத்தை உண்டுபண்ணிய தம் நாட்டுத் தலைவர்