பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150 சேர மன்னர் வரலாறு



மரத்தில் சார்த்திவிட்டு வயல்களில் மலர்ந்திருக்கும் வள்ளைப் பூக்களைக் கொய்து விளையாடுவர்; வயல்களில் மீனினங்களை மேய்ந்துண்ணும் நாரை முதலிய குருகுகளும், வயல் வரம்பில் தங்கியிருக்கும் ஏனைப் புள்ளினங்களும் நீங்குமாறு அம்மகளிர் அவற்றை ஓப்புவர்; இசைச்சுவை நல்கும் இசைவாணர், ஊர் மன்றத்தில் தங்கியிருந்து, மனைதோறும் போந்து யாழை இசைத்து இனிய பாட்டுகளைப் பாடி இன்புறுத்துவர். இத்தகைய வளஞ்சிறந்த நாடு இனி இரங்கத்தக்க அழிவெய்தும் போலும்[1]” என்று பாடினர்.

இத்துணை வளஞ் சிறந்த நாடு கெடுவது கூடாது என்ற கருத்துக் குட்டுவனுக்கும் தோன்றிற்று. நாட்டிற்குக் கேடு உண்டாகாத வகையில் போரை நடத்துமாறு தானைத் தலைவரைக் குட்டுவன் பணித்தான். கடல் போற் பெருகி வந்த படைத்திரளைக் கண்ட மாத்திரையே, பகை மன்னர் மனவலியழிந்து அடிபணிந்து அவன் ஆணைவழி நிற்கலுற்றனர். நாட்டு மக்கள் குட்டுவனை வாயார வாழ்த்தினர். நாட்டினில் நல்லரசு நிலவத் தொடங்கிற்று.

கோதமனார் உரைத்தவற்றால் குட்டுவன் மனம் மாறி அறமே நினைந்தொழுகும் அருள் வேந்த னாயினன். நெடும்பாரதாயனார் முதலிய சான் றோரைக் கொண்டு வேள்விகள் பல செய்தான். அறம் முதலிய உறுதிப் பொருள்களை எடுத்துரைக்கும் நூல்களைச் சான்றோர் விரித்துரைக்கக் கேட்டு

  1. பதிற். 29.