பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/159

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் 157



மருமக்கள் தாய்த முறையைக் கொணர்ந்து புகுத்திக் குழறுபடை செய்வது உண்மையாராய்ச்சி ஆகாது.

குட நாட்டை இமயவரம்பனும், குட்ட நாட்டைப் பல்யானைச் செல்கெழு குட்டுவனும் ஆட்சி புரிந்து வருகையில், இளையனான நார்முடிச்சேரல், வேணாட்டிற்கு வட கிழக்கிலும், குட்ட நாட்டிற்குத் தென்கிழக்கிலும், பாண்டி நாட்டைச் சாரவும் இருந்த குன்ற நாட்டில் இருந்து நாடுகாவல் செய்துவந்தான். இப்போது அது குன்றத்தூர் நாடு என வழங்குகிறது. அப்பகுதியில் வண்டன் என்னும் பழையோன் வழிவந்தோரும் முதியர் இனத்தவரும் வாழ்ந்து வந்தனர். அவர்கட்குத் தலைவனாய், அவரது பேரன்புக்கு உரியனாய் நார்முடிச்சேரல் இருந்து வந்தான். குன்ற நாட்டுக்கு மேற்கிலும் வடமேற்கிலும் உள்ள குட்டநாட்டையும், குட்டநாட்டின் கிழக்கிலுள்ள பூழி நாட்டையும் குட்டுவன் ஆட்சி செய்து வந்தான். பாலைக் கோதமனார் நெடும்பாரதாயனார் முதலிய சான்றோருடன் கூடிச் செல்கெழு குட்டுவன் துறவுள்ளம் கொண்டு அறவேள்வித் துறைகளில் மிக்க ஈடுபாடு உடையனாகியபோது, நார்முடிச்சேரல் பூழி நாட்டுக்குக் கிழக்கில் இருக்கும் மலைநாட்டைத் தன் ஆட்சியிற்கொண்டு நாடு காவல் புரிந்தொழுகினான்.

அந்நாளில், குட நாட்டின் வடக்கிலுள்ள கொண்கான நாட்டில், நன்னன் என்னும் வேள்புல வேந்தன், சேரலாதன் வழி நின்று நாடு காவல் செய்து வந்தான். கொண்கானத்தின் வடபகுதி துளு நாடு என்றும், அதன் கீழ்ப்பகுதி புன்னாடு என்றும் வழங்கின.