பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/162

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160 சேர மன்னர் வரலாறு



துளுநாட்டுத் தோகைக்கா[1] என்னும் ஊர் இப்போது ஜோக் (Joag) என்ற பெயருடன் ஒரு சிற்றூராக இருக்கிறது. இவை முன்பும் காட்டப்பட்டுள்ளன.

நன்னன் வழியினர், நன்னன் வேண்மான்[2], நன்னன் ஆஅய்[3], நன்னன் சேய்[4]”, நன்னன் ஏற்றை[5], என்று சான்றோர்களால் குறிக்கப்பெறுகின்றனர். இவருள் நன்னன் வேண்மான் என்பான் வியலூர் என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு நாடுகாவல் புரிந்தான். வியலூர் இப்போது துளு நாட்டில் பெயிலூர் (Bailur) என வழங்குகிறது; இவ்வியலூர் வயலூரெனவும் வழங்கும்[6]. நன்னன் ஆஅய் , பிரம்பு என்னும் ஊரைத் தலைமையாகக் கொண்டு நாடுகாவல் செய்தான். நன்னன் சேய் திருவண்ணாமலைக்கு மேற்கிலுள்ள செங்கைமா என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு அதனைச் சூழ்ந்துள்ள நாட்டை ஆண்டுவந்தான். நன்னன் ஏற்றை பொள்ளாச்சிக்கு அண்மையிலுள்ள ஆனைமலைப் பகுதியில் இருந்து பாலைக்காட்டுப் பகுதியை ஆட்சி செய்து வந்தான். அப் பகுதியில் நன்னன்முக்கு[7] நன்னன்பாறை[8] நன்னனேற்றை[9] என்ற பெயர் தாங்கிய பலவூர்கள் இருப்பது போதிய சான்றாகும். இவ்வாறு நன்னன் என்ற பெயர் பூண்ட தலைவர்கள் பலர் மேலைக் கடற்கரையிலும் கொங்கு நாட்டிலும் பரவி வாழ்ந்து வந்தமை நன்கு தெளியப்படும்.


  1. அகம் 15.
  2. ஷை 97.
  3. ஷை 366.
  4. மலைபடுகடாம் 87.
  5. அகம் 44.
  6. பதிற் ii பதி.
  7. மலையாள மாவட்டத்துப் பொன்னானி தாலூகா.
  8. ஷை ஏர்நாடு வட்டம்.
  9. T.A.S. Vol. iii பக். 8, 10. 20.