பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/169

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் 167



நாட்டிலும் வாழ்ந்த தலைவர்கள், சேரமான், கருத்துக்கு மாறாகத் தாத்தாமும் தனியரசாக முயன்றனர். வலிமிக்கோர் எளிய தலைவர்களை வென்று தமக்கு அடிப்பட்டொழுகச் செய்தனர். சிலர் நன்னனது துணையை நாடினர். அது கண்ட நன்னன், தன் கருத்து முற்றுதற்கேற்ற செவ்வி தோன்றியது கண்டு பெரிய தானையோடு பாலைக்காட்டு வழியாகச் சேர நாட்டிற் புகுந்து பூழிநாட்டையும் அதனை அடுத்துள்ள பாலைக்காட்டுக் கணவாய்ப் பகுதியையும் தனக்குரிய தாக்கிக் கொண்டான். அவன் படையினது மாணாச் செயல்களால், அப்பகுதிகளில் வாழ்ந்த உயர்குடி மக்கள் பலர் நிலைகலங்கி வேறு நாடுகட்குச் சென்று வருந்தினர். வாழ்ந்த மக்கள் சிலர் தாழ்ந்து மெலிந்தனர்; நாடெங்கும் துன்பமே நிலவுவதாயிற்று.

இந்நிலையில் அறத்துறையில் நின்று குட்டுவன் துறக்கமடைந்தான். அரசு கட்டிலுக்குரிய பதுமன்தேவி மகனான நார்முடிச் சேரல் குன்ற நாட்டினின்று பூழிநாடு கடந்து குட்டநாடு புகுந்து முடிசூடிக் கொள்ள வேண்டியவனானான். பூழிநாட்டுத் தலைவர் சிலர் நன்னன் பக்கல் இருந்தமையின், அவன் குன்ற நாட்டு வண்டரும் முதியரும் சேரரும் படைத்துணை செய்யப் பெரியதொரு தானையுடன் பூழி நாட்டுட் புகுந்து எதிர்த்தவரை வென்று நன்னனையும் வெருட்டி யோட்டி வென்றி மேம்பட்டான். பூழிநாடும் பண்டு போல் சேரர்க்குரியதாயிற்று.

பூழிநாட்டின்கண் இருந்து நன்னர்க்குத் துணையாய்க் குறும்பு செய்தவர்களை அடக்கி, நன் மக்கள்