பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168 சேர மன்னர் வரலாறு



துணை செய்ய நாட்டில் நல்வாழ்வு நிகழச் செய்தான். பகைவர்க்கு அஞ்சி ஒடுங்கியிருந்த சான்றோர் ஒன்று. கூடிக் களங்காய்க் கண்ணியும் பனை நாரால் முடியும் செய்து, பதுமன்தேவியின் மகனைச் சேரமான் என முடிசூட்டிச் சிறப்பித்தனர்; அன்று முதல் அவன் சேரமான் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் என வழங்கப்படுவானாயினான். அவனது வென்றி விளக்கத்தால் ஆங்காங்கு இருந்து குறும்பு செய்த பகையிருள் புலர்ந்து கெட்டது. குட்ட நாட்டுத் தலைவரும் பிறரும் நார்முடிச் சேரலின் அடி வணங்கி ஆணைவழி நிற்கும் அமைதியுடையராயினர். சேரமான் நார்முடிச் சேரல் குட்டநாடு அடைந்து வஞ்சிநகர்க்கண் இருந்து அரசு புரிந்து வந்தான்.

நார்முடிச் சேரல், மலைபோல் உயர்ந்து அகன்ற மார்பும், கணையமரம் போலப் பருத்த தோளும், வண்டன்[1] என்பானைப் போன்ற புகழ்க் குணமும் உடையவன். தழைத்த கூந்தலும், ஒள்ளிய நுதலும், அழகுறச் சுழிந்த உந்தியும், அறஞ்சான்ற கற்பும், இழைக்கு விளக்கம் தரும் இயற்கை யழகும் உடையளாகிய அவன் மனைவி, அருந்ததியாகிய செம்மீனை ஒத்த கற்புநலம்


  1. வண்டன் என்பவன் பீர்மேடு என்ற பகுதியில் பண்டை நாளில் சிறந்த புகழ்பெற்று வாழ்ந்தவன். வண்டன்மேடு, வண்டப் பேரியாறு என்ற பெயருடன் அங்கே உள்ள பகுதிகள் இன்றும் அவனை நினைப்பிக்கின்றன. இந்த வண்டன் பெயரால் அமைந்த வண்டனூர் ஏர் நாடு வட்டத்தில் மேலைக் கடற்கரைக்குக் கிழக்கே 30 மைல் அளவில் உளது; அங்கே ஏழு கற்குகைகள் இருக்கின்றன. அவற்றுட் காணப்படும் சிதைந்த எழுத்துகள் அவ்வூரை வண்டனூர் என்று கூறுகின்றன; அப் பகுதியில் வாழ்பவர் அதனை வண்டூர் எனச் சிதைத்து வழங்குகின்றனர்.