பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் 169



சிறந்து விளங்கினாள். சேரமானுடைய சால்பும் செம்மையும் நாற்றிசையினும் புகழ் பரப்பி விளங்கின. அரசியற் கிளைஞர்க்கு வேண்டுவனவற்றைப் பெருக நல்கியும், குன்றாத வளம் அவற்கு உண்டாயிற்று. தன்னாட்டு அரசியல் நெருக்கடியால் வளமும் பாதுகாப்புமின்றித் துளங்கிய மக்களைப் பண்டுபோல் வளமுற வாழச் செய்தான். அதனால் அவனது வென்றியைச் சான்றோர், “துளங்குகுடி திருத்திய வலம்படு வென்றி[1]” எனப் பாராட்டிப் பாடினர்.

பகைவரை அடக்கி ஒடுக்குவதிலும், சான்றோரை நிலை நிறுத்தி நாட்டில் நல்லொழுக்கம் நிலவச் செய்வதே வேந்தர்க்குப் பெருவென்றி என்பது அவன் கருத்தாயிற்று. தான் வென்ற பகுதியில், காவலர் நாட்டைக் கைவிட்டுத் தம்மைக் காப்பதே கருதி ஓடிவிட்டதனால், கொழு கொம்பில்லாக் கொடி போல் அலமந்த நாட்டுமக்கட்குத் தன் பொறைக்குணத்தால் ஆதரவு செய்தான். பகைவர் கைப்பட்டு வருந்திய மறவர்களைக் கூட்டிவந்து, வேண்டும் சலுகை தந்து, அவர் நெஞ்சில் தன்பால் மெய்யன்பு நிலவுமாறு செய்தான். அச் செயலின்கண் அவன் ஒருபாலும் கோடாது செய்த செம்மை, அவர்களை அவனது தாள் நிழற்கண் இருத்தற்கே விழையச் செய்தது.

பகைத்தோர் புலத்தை வென்று அவ்விடத்தே தங்கி, அவர்கள் வைதும் வருந்தியும் வழங்கிய சுடுசொற்களையும் செவியேற்றுச் சினங்கொள்ளாது


  1. பதிற். 32:7.