பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172 சேர மன்னர் வரலாறு



நார்முடிச் சேரல் இவ்வாறு நல்லரசு புரிந்து வருகையில், பாலைக்காட்டுப் பகுதியில், நாடு காவல் செய்து வந்த நன்னனூரில் ஒரு நிகழ்ச்சியுண்டாயிற்று. நன்னனுக்குப் படைத் துணையாகப் கோசர்கள் பலர் நன்னூரில் வாழ்ந்துவந்தனர். அவ்வூரில், நன்னன், மாமரமொன்றைத் தனக்குக் காவல் மரமாகக் கொண்டு அதனை உயிரினும் சிறப்பாகப் பேணி வந்தான். அம் மரம் அவ் ஊரருகே ஓடும் ஆற்றின் கரையில் இருந்தது. ஒரு நாள் அம் மரத்தின் பசுங்காய் ஒன்று ஆற்று நீரில் வீழ்ந்து தண்ணீரில் மிதந்து கொண்டு சென்றது. ஆங்கொருபால் ஆற்று நீரில் இளம்பெண் ஒருத்தி நீராடிக் கொண்டிருந்தாள். அவளருகே அக் காய் மிதந்து வரவும், அவள் எடுத்து அதனை உண்டுவிட்டாள். அச் செய்தி நன்னுக்குத் தெரிந்தது. உடனே அவன் கழிசினம் கொண்டு அவளைக் கண்ணோட்டம் இன்றிக் கொல்லு மாறு கொலை மறவரைப் பணித்தான்,

அவள் கோசரினத்துத் தலைவருள் ஒருவன் மகளாகும். நன்னனது ஆணை கேட்ட தந்தை அவள் நிறை பொன்னும் என்பத்தொரு களிறும் தருவதாகச் சொல்லி அப் பெண்ணினது கொலைத் தண்டத்தை நீக்கி மன்னிக்குமாறு வேண்டினான். வன்னெஞ்சின னான நன்னன் அவன் வேண்டுகோளை மறுத்துத் தன் கருத்தையே முற்றுவித்தான்[1]. அது கண்டதும் கோசர் களுக்கு நன்னன்பால் வெறுப்பும் பகைமையும்


  1. குறுந். 292. பெண் கொலைசெய்யப்பட்ட இடத்தைப் பெண்கொன்றான்பாறை என்பர். மலையாளர் அதனைப் பெங்கணாம்பறா எனக் கூறுகின்றனர்.