பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174 சேர மன்னர் வரலாறு



உரியவாக்கிக் கொண்டான். அவன் படைப்பெருமை கண்டு எதிர் நிற்க மாட்டாத கோசரும் பிறரும் குறும்பு நாட்டுப் புன்றுறை நாட்டில் தங்கியிருந்த நன்னன்பாற் சென்று சேர்ந்தனர்.

நார்முடிச்சேரல் நன்னன் தங்கியிருந்த பகுதியைப் பண்டுபோல் சேரர்க்கு உரியதாக்கிக் கொங்கு வஞ்சியாகிய தாராபுரத்தை அரண்களால் வலியுறுவித்து, வடக்கில் வாகைப் பெருந்துறைப் பகுதியில் இருந்த நன்னனை எதிர்த்தான். நன்னன் படையும் சேரமான் படையும் வாகைப் பெருந்துறையில் கடும் போர் புரிந்தன. அப் போரில் நன்னன் படுதோல்வியுற்று ஓடினான். அவனது காவல் மரமான வாகையும் தடித்து வீழ்த்தப்பட்டது. சென்ற இடம் தெரியாவாறு நன்னன் மறையவே இப் போரால் நன்னன் பொருதழிந்த இடத்தைக் கடம்பின் பெருவாயில் என்று பதிற்றுப் பத்தின் நான்காம் பதிகம் கூறுகிறது. ஆனால், கல்லாடனார் என்னும் சான்றோர், “குடா அது, இரும்பொன் வாகைப் பெருந்துறைச் செருவில், பொலம்பூண் நன்னந் பொருதுகள் தொழிய, வலம்படு கொற்றம் தந்த வாய் வாள், களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல், இழந்த நாடு தந்தன்ன பெருவளம் பெரிதும் பெறினும்[1]” என்று குறிக்கின்றார்.

சேரமானது வெற்றி யெல்லை பாயல் மலையில் தோன்றிக் காவிரியொடு வந்து கூடும் பூவானி (பவானி) யாற்றை எல்லையாகக் கொண்டு விளங்குவதாயிற்று.


  1. அகம். 199.