பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் 177



பாணர் பொற்பூப் பெறுவர். இளையர் உவகை மிகுந்து களம் வாழ்ந்த தோட்டின் வழிநின்று பாகர் குறிப்பறிந் தொழுகும் யானைகள் பல நல்குவன். அவன்பாற் செல்க[1]” என்று இறுதியில் வற்புறுத்தினார். வேந்தன் அப் பாட்டைக் கேட்டு இன்புற்று இரவலர் பலர்க்கும் பெரும்பொருளை நல்கிச் சிறப்பித்தான்.

பரிசில் பெற்று இரவலர் வேந்தன்பால் விடை பெற்றுச் சென்றனர். செல்பவர், அவனுடைய சுற்றத்தரான மறச் சான்றோர் சிலரைக் கண்டு தம்முடைய புலமை நலம் காட்டி இன்புறுத்தினர். அவர்களும் நார்முடிச் சேரலை யொப்ப மிக்க பரிசில்களை நல்கினர். அச் செயலைக் கண்டிருந்த காப்பியனார்க்கு வியப்புப் பெரிதாயிற்று. வேந்தனோடு சொல்லாடிக்கொண்டிருக்கையில், அவனுடைய தானைச் சுற்றத்தின் சால்பைப் பாடலுற்று, “வேந்தே, தும்பை சூடிச் செய்யும் போரில், தெவ்வர்முனை அஞ்சி அலறுமாறு நின் ஏவல் வியன்பணை முழங்கும்; பகைவருடைய அரண்கள் வலி குன்றிவாட்டமெய்தும்; அக்காலத்தே நீ காலன் போலச் செல்லும் துப்புத் துறைபோகியவன்; கடுஞ்சின முன்பனே, உலர்ந்து நிற்கும் வேல மரத்தின் கிளையில் சிலந்தி தொடுத்த நூல்வலை போலப் பொன்னாலமைத்த கூட்டின் புறத்தே நாரிடைத் தொடுத்த முத்தும் மணியும் கோத்துச் செய்த திருமுடியை அணிந்திருக்கும் வேந்தே, நின் மறங்கூறும் சான்றோர், நீ பிறர்க்கென வாழும் பெருந்


  1. பதிற். 40.