பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/184

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

182 சேர மன்னர் வரலாறு


 கடிமிளையாக, வில்லும் அம்புமாகிய படை முள்வேலியாக, பிறபடைகள் அகழியாக, முரசுகள் இடியேறாகக் கொண்டு பகைவர் படையணி அமைந்திருந்தது. நின் கடற்பெருந்தானை அதனை நோக்கி வந்தது. படை மறவர் களிறுகளைப் பகைவரது காவல் மரத்திற் பிணித்து நிறுத்தினர்; நீர்த்துறைகள் கலங்கின; வேல் மறவரும் பிறரும் ஒருபால் தங்கினர். இவ்வளவே நின் தானை மறவர் செய்தது; சிறிது போதிற்கெல்லாம் அஞ்சியோடத் தலைப்பட்டது. எனக்கு இஃது ஒரு பெருவியப்பைத் தருகிறது [1]” என்றார்.

நார்முடிச் சேரல், காப்பியனார் கருத்தை யறிந்து, “புலவர் பெருந்தகையே, இதில் வியப்பில்லை ; நிலைமக்களைச் சால உடைய தெனினும் தானைக்குத் தலைமக்களே சிறந்தவர்; தலைமக்கள் இல்லெனின் தானையும் இல்லையாம்” என்றான். “அறிந்தேன், அறிந்தேன்” எனத் தலையசைத்துத் தெளிவுற்ற காப்பியனார், “மாறா மனவலி படைத்த மைந்தரது மாறுநிலை தேயச் செய்யும் போர்வன்மையும், மன்னர் படக் கடக்கும் மாண்பும் உடையவன் நீ; மாவூர்ந்தும், தேர்மீதிருந்தும், களிற்று மிசை இவர்ந்தும், நிலத்தில் நின்றும் நின் தானை மறவர் போர் நிகழ்த்த, நீ நின் தானையைச் சூழ்ந்து காவல் புரிகின்றாய்; அதனால் பகைவர் கண்டு அஞ்சி யோடுகின்றனர் என்பதை அறிந்தேன் [2]” என்று பாடினர்.


  1. பதிற். 33.
  2. பதிற். 34.