பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் 189



செல்வம் தொகுத்த பேராண்மை நின்பால் உளது; அதனால் நீ பிறர் பயன்பெற்று இன்ப வாழ்வு பெற நன்கு வாழ்கின்றாய்; உலகில் செல்வர் பலர் உளரெனினும், நின் போல் பிறர்க்கென வாழும் பேராண்மை யுடையோர் அரியராதலால், அவர் எல்லாரினும் நின் புகழே மிக்குளது; அவரது வாழ்வினும் நினது பெருவாழ்வே உலகிற்குப் பெரிதும் வேண்டுவது; ஆகவே நீ பல்லாண்டு வாழ்க[1]” என வாழ்த்தியமைந்தார்.


8. கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்

களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் காலத்தில், அவனுக்கு நேர் இளையவனும், அவன் தந்தை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுடைய மற்றொரு மனைவியான சோழன் மணக்கிள்ளியின் மகனுமான செங்குட்டுவன் குடநாட்டுப் பகுதியில் இருந்து தன் தமையனுக்குக் கீழ் நின்று துணை புரிந்து வந்தான். நார்முடிச் சேரல் இறந்தபின் செங்குட்டுவனே சேர நாடு முழுதிற்கும் முடிவேந்தனாயினான். செங்குட்டுவன் சிறந்த மெய்வன்மையும், பகைவரும் வியந்து பாராட்டும் திண்ணிய கல்வியறிவும், நண்பர்பாலும் மகளிர்பாலும் வணங்கிய சாயலும், பிறர்பால் வணங்காத ஆண்மையும் உடையவன். போர்கள் பல செய்து வெற்றிபெற்ற காலத்துப் பகைவரிடத்திலிருந்து பெரியவும் அரியவு மான பொருகள் பல பெறுவான்; ஆயினும், அவற்றை அத்தன்மையனவானக் கருதாது பிறர்க்கு ஈத்துவக்கும்


  1. பதிற். 38.