பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் 191



சிலர், குடவர் கோமானாய்த் திகழும் செங்குட்டுவனை அடைந்து நிகழ்ந்தது முற்றும் நிலைபெறக் கூறினர்.

செங்குட்டுவன் வலிமிக்க தொரு படையைத் திரட்டிக்கொண்டு சோழ நாட்டிற்குச் சென்றான். சோழ நாட்டில் தன் மைந்தனுமான கிள்ளிவனோடு ஒன்பது சோழர்கள் போரிடுவது கண்டு அவர்களை ஒன்று படுத்த முயன்றான். அம் முயற்சி கைகூடாது போகவே அவர்களோடு தானும் போர் தொடுத்தான். அவர்களும் பலர் தம்மிற் கூடி உறையூரை நோக்கித் திரண்டு வந்தனர். செங்குட்டுவன் கிள்ளிக்குத் துணையாய் நின்று உறையூர் நேரிவாயிலிலேயே[1] அவர்களை எதிரேற்று வலியழித்தான்; அதனால் அவர்கள் மீட்டும் போர் தொடுக்கும் ஆற்றலின்றிக் கெட்டழிந்தனர். முடிவில் செங்குட்டுவன் தன்மைந்துன்னைச் சோழர் வேந்தனாக முடிசூட்டிச் சிறப்பித்துவிட்டுத் தன் குடநாடு வந்து சேர்ந்தான். இதனையே, “வெந்திறல் ஆராச் செருவில் சோழர் குடிக்குரியோர் ஒன்பதின்மர் வீழ வாயிற்புறத்து இறுத்து[2] நிலைச் செருவின் ஆற்றலை அறுத்துக் கெடலருந்தானை யொடு” திரும்பினான் என்று பதிற்றுப்பத்தின் பதிகம் கூறுகிறது.

நார்முடிச்சேரலுக்குப் பின் செங்குட்டுவன், சேரநாட்டு முடிவேந்தனாய் வஞ்சிமாநகர் வந்து சேர்ந்தான். இவனது புகழ் பெருகுவது குடநாட்டுக்கு வடக்கிலிருந்து வட வேந்தர்களுக்கு மனக்காய்ச்சலை


  1. உறையூரின் தென்புற வாயில் நேரிவாயிலாகும்.
  2. சிலப். 27: 118-23: 116-9, பதிற். iv பதி.