பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

198 சேர மன்னர் வரலாறு


களை அறிவுறுக்குமாறு ஏற்பாடு செய்தான். அதற்காகச் சேர நாட்டு உம்பற்காடு என்ற பகுதியின் வருவாயைப் பரணற்கு நல்கித் தன் மகன் குட்டுவன் சேரல் என்பவனை அவர்பால் கையடைப்படுத்துக் கல்வி கற்பிக்குமாறு செய்தான். பிற்காலத்தே, சேர நாட்டுக் கானப்பகுதி யொன்று பரணன் கானம் என்ற பெயரெய்தி இன்றும் திருவிதாங்கூர் நாட்டில் மினச்சில் பகுதியில் உளது.

ஆசிரியர் பரணர், செங்குட்டுவன் விரும்பியவாறு தமிழ்ப்பணி செய்யுங்கால், களவொழுக்கம் பூண்டு ஒழுகும் தமிழ்த் தலைமகன் இரவுக்குறிக்கண் தலை வேற்றுக்குறி நிகழக் கண்டு அவ்விடம் வந்து அவனைக் காணாமல் சென்ற தலைவி, அவன் மெய்யாக வந்து செய்த வரவுக் குறியையும் வேற்றுக்குறி யென்று நினைந்து வாரா தொழிந்தாள்; தலைமகன் ஏமாற்றம் எய்தித் தன் நெஞ்சை வெகுண்டு, “பெறலருங் குரையள் என்னாள், வைகலும் இன்னா அருஞ்சுரம் நீந்தி நீயே என்னை இன்னற் படுத்தினை; அதனால்,

“படைநிலா விளங்கும் கடல்மருள் தானை
மட்டவிழ் தெரியல் மறப்போர்க் குட்டுவன்
பொருமுரண் பெறாஅது விலங்கு சினம் சிறந்து
செருச்செய் முன்பொடு முந்நீர் முற்றி
ஒங்குதிரைப் பௌவம் நீங்க ஒட்டிய
நீர்மாண் எஃகம் நிறத்துச் சென்றழுந்தக்
கூர்மதன் அழியரோ நெஞ்சே[1]"
  1. அகம். 219.